×

தீக்காயத்தை குணமாக்கும் தேங்காய் தண்ணீர்!

நன்றி குங்குமம் தோழி

மெக்கானிக்கல் இன்ஜினியராக பட்டம் பெற்ற பொள்ளாச்சி இளைஞர் விவேகானந்த். இவர் சமீபத்தில் நம் இந்திய நாட்டின் மூத்த குடிமகன் எனப்படும் ஜனாதிபதி முர்மு அவர்களிடம் வீணாகும் தேங்காய் தண்ணீரை பயன்படுத்தி நாட்பட்ட சர்க்கரை நோயினால் ஏற்படும் புண் மற்றும் தீக்காயம் குணமாக மருந்துகளை கண்டுபிடித்து சாதனை விருதினை பெற்றுள்ளார்.

உங்களைப் பற்றி…

நான் பிறந்தது வளர்ந்து எல்லாம் சொந்த ஊரான பொள்ளாச்சியில்தான். என் பெற்றோர் தேங்காய் நார் சம்பந்தப்பட்ட தொழிலில் கடந்த நாற்பது வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்கள். இது தவிர நாங்க ஓட்டல் ஒன்றும் நடத்தி வருகிறோம். அதனை என் தம்பி பார்த்துக் கொள்கிறார். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பினை அமெரிக்காவில் படிச்சேன். மேலும் அங்கு ‘ஆர்க்கனோ ஜெனசஸ்’ என்ற படிப்பும் படித்து முடித்து அமெரிக்காவில் ஆராய்ச்சி துறையில் வேலை பார்த்து வந்தேன். அதன் பிறகு இந்தியாவிற்கு திரும்பிய நான்
பெற்றோருக்கு உதவியாக அவர்களின் தேங்காய் தொழிலில் ஈடுபட்டேன்.

தேங்காய் இளநீர் ஆராய்ச்சி…

தேங்காயில் எல்லா பகுதியிலும் ஏதேனும் உபயோகமான பொருள் செய்யும் வாய்ப்பு இருப்பதை அறிந்தேன். முற்றிய தேங்காய் தண்ணீரை இதுவரை யாரும் உபயோகிப்பதே இல்லை. அதனை மதிப்பு கூட்டு பொருளாகவும் யாரும் மாற்றி அமைத்ததில்லை. அது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். அதன் முடிவில் 2020ல் தேங்காய் தண்ணீரைக் கொண்டு எளிதில் ஆறாமல் பிரச்னைத் தரக்கூடிய நாட்பட்ட சர்க்கரை நோயினால் ஏற்படும் புண் மற்றும் தீக்காயம் இவற்றை விரைவாக குணப்படுத்த முடியும் என்று தெரிந்துகொண்டேன்.

ஆனால் அதற்கு முழுவடிவம் ெகாடுக்க அதற்கான ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கி வெற்றியும் பெற்று இருக்கேன். தேங்காய் தண்ணீர் கொண்டு சர்க்கரை நோயினால் ஏற்படும் புண் மற்றும் தீக்காயத்திற்காக நான் கண்டுபிடித்த மருந்திற்குதான் எனக்கு ஜனாதிபதி விருது கிடைத்தது.

மருந்து தயாரிப்பு…

ஆய்வு சக்சஸ் என்று வந்தவுடன் நாங்க மருந்து தயாரிக்க துவங்கிட்டோம். எங்களின் மருந்து வரும் ஆண்டில் மார்க்கெட்டில் கிடைக்கும். இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட ஏழரை கோடி மக்கள் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 30% எளிதில் குணமாகாத கடினமான புண்கள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள். ஆறாத காயத்தினால் நீரிழிவு பிரச்னை உள்ளவர்களின் கை மற்றும் கால் விரல்களை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

அதற்கு நிரந்தர தீர்வு அளிக்கவே நான் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டேன், வெற்றியும் கண்டிருக்கிறேன். இந்த மருந்தினை குறைந்த விலைக்கு தர இருப்பதால், அடித்தட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.ஆண்டுக்கு இருபது கோடி லிட்டர் வீணாகப்போகும் தேங்காய் தண்ணீரை பயன்படுத்தி நாங்க உருவாக்கி இருக்கும் மருந்தின் பெயர் ‘வேல்யு’.

சந்தித்த பிரச்னைகள்…

இரண்டரை வருட ஆராய்ச்சியில் பல சவால்கள், சோதனைகளை கடந்து தான் வெற்றி பெற்றோம். சர்க்கரை நோய் புண்களை சரி செய்யக்கூடி மருத்துவ ஃபார்முலா எங்களுக்கு எளிதில் கிடைக்கவில்லை. நாங்க மருந்தினை தயாரித்தாலும், அதற்கான அங்கீகாரம் பெறவேண்டும். அது அரிதான விஷயமாக இருந்தது. மருந்து தயாரிக்க எதிர்பார்த்த ஃபண்டிக் கிடைக்கவில்லை. எங்களின் முயற்சி பற்றி தெரிந்து கொண்டு மத்திய அரசு ஒத்துழைப்பு தந்தது. மானியமும் இப்போது கிடைத்துள்ளது.

மருந்தின் தனிச் சிறப்பு…

பயோ செல்லுலோஸ் என்று அறிவியலில் குறிப்பிடுவார்கள். பாக்டீரியா செல்லுலோஸ் அட்டையினை தேங்காய் தண்ணீரில் கலந்தால் ‘பயோ செல்லுலோஸ்” உருவாகிறது. இது எந்த வித நச்சுத்தன்மையும் இல்லாதது. தாய்ப்பாலில் உள்ள ‘லாரி அமிலம் தேங்காய் எண்ணெயிலும் உள்ளது. இது ஒரு கிருமிநாசினி. எந்த மருந்தையும் மத்திய அரசு ஆய்வு செய்து அனுமதி வழங்கும். இதில் ஏகப்பட்ட வரைமுறைகள் உள்ளன. பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு தான் எங்களுக்கு மருந்தை தயாரிக்கக் கூடிய உரிமம் கிடைத்தது. மத்திய அரசு சான்றிதழை அளித்த பிறகே மருந்தினை மார்க்கெட்டில் விற்பனை செய்ய முடியும். எந்தவித செயற்கை கலப்பும் இன்றி இயற்கை முறையில் தயாரிக்கிறோம். பின் விளைவுகள் கிடையாது. எங்களின் கடின உழைப்பிறகு ஜனாதிபதி கையாலேயே அங்கீகாரம் கிடைத்தது. மேலும் மேலும் சாதிக்க வேண்டும் என்று தூண்டுகோலாக உள்ளது.

எதிர்கால லட்சியம்…

இப்போது ஒரு நாளைக்கு ஆயிரம் லிட்டர் வீணாக போகும் தேங்காய் தண்ணீரை உபயோகித்து வருகிறோம். எதிர்காலத்தில் ஒரு நாளைக்கு ஐம்பதாயிரம் லிட்டர் தேங்காய் தண்ணீரை உபயோகிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த கொப்பரை தேங்காய் தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் பெண்கள்தான். அவர்களுக்கு அந்த தேங்காய் தண்ணீர் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தருகிறோம்.

ஒருமித்த சிந்தனையும் கடின உழைப்பும் முயற்சியும் இருந்தால் சிறிய கிராமங்களில் இருப்பவர்களும் வெற்றி பெற முடியும். நான் இதை பாராட்டுக்காகவோ பணம் சம்பாதிப்பதற்காகவோ செய்யவில்லை. புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம் மக்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்க வேண்டும் என்பதே என் நோக்கம். இதுபோல் புதுமையான ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு நாங்க ஒரு வழிகாட்டியாக இருப்பதன் மூலம் ஆரோக்கிய இந்தியாவினை உருவாக்க வேண்டும்.

தொகுப்பு: விஜயா கண்ணன்

The post தீக்காயத்தை குணமாக்கும் தேங்காய் தண்ணீர்! appeared first on Dinakaran.

Tags : Kunkum Doshi Pollachi ,Vivekanand ,President ,Murmu ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...