×

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியது ஏன்? : உயர்நீதிமன்றம் காட்டம்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் வழக்கை முடித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர் மற்றும் செந்தில்குமார் அடங்கி அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஹென்றி திபேன் ஆஜராகி, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையமும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் பரிந்துரைத்துள்ளது என்ற தகவலை சுட்டிக்காட்டினார். விசாரணையில் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி, சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது நியாமானதுதானா? இழப்பீடு வழங்க உத்தரவிட்டதுடன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் பணி முடிவடைந்து விடவில்லை. சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு, இழப்பீட்டை அவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். மனித உரிமை ஆணைய உத்தரவுக்கு எதிராக இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பு கருததையும் கேட்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய மனித உரிமை மீறலில் ஈடுபட்ட, அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இணைத்து மனுத்தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியது ஏன்? : உயர்நீதிமன்றம் காட்டம் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi shooting ,High Court ,Chennai ,Chennai High Court ,Tuthukudi Sterlite plant ,Thoothukudi ,Katham ,
× RELATED ராஜினாமா செய்யாமல் வேட்புமனு தாக்கல்...