டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனவரி 22ம் தேதி தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. ஏற்கனவே 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் சென்னையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வருகை தந்து ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மழை பாதிப்பு காரணமாக ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
மீண்டும் எப்போது நடைபெறும் என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகாத நிலையில், டெல்லியில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் நாளை முதல் 2 நாட்களுக்கு அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த கூட்டத்தின் வாயிலாக நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள், வாக்காளர் இறுதிப்பட்டியல் தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளது.
தொடர்ந்து ஜனவரி 22ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் சென்னை வருகை தந்து 2 நாட்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார்கள். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், காவல்துறை உயரதிகாரிகள், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலை எப்போது நடத்தலாம் என்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அதற்கு பிறகு ஒட்டுமொத்தமான நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் போது தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு டெல்லி பயணம் ..!! appeared first on Dinakaran.