×

“போக்குவரத்து தொழிலாளர்கள் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வு உள்பட 6 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு, அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், நெல்லை, நத்தம், பரமக்குடி, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இருப்பினும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகம் முழுவதுமாக பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து தொழிலாளர்கள் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த இடையூறும் இல்லை. இருப்பினும் தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்துவதில் தொடர் பிடிவாதத்தில் இருக்கிறார்கள்.

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். இன்று பிற்பகலுக்கு பிறகு கிடைக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து உயர்நீதிமன்றம் என்ன வழிகாட்டுதல்கள் கொடுக்கிறதோ அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். ஐஎன்டியூசி, தொமுச உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் மூலமாக தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் பயணிக்கின்றனர் எனவும் அமைச்சர் சிவசங்கர் குறிப்பிட்டார்.

The post “போக்குவரத்து தொழிலாளர்கள் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”: அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : High Court ,Minister ,Sivasankar ,Chennai ,Transport Minister ,CID ,ANNA TRADE UNIONS ,TAMIL NADU GOVERNMENT ,Court ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...