×

சித்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி 7வது நாளாக தற்காலிக தூய்மை பணியாளர்கள் பிச்சை எடுத்து நூதன போராட்டம்

*மாநகராட்சி அலுவலகம் எதிரே நடந்தது

சித்தூர் : சித்தூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி, தற்காலிக தூய்மை பணியாளர்கள் பிச்சை எடுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சித்தூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஏஐடியுசி ஊழியர் சங்கம் சார்பில், தற்காலிக தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நூதன முறையில், பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏஐடியுசி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் 2019ம் ஆண்டு தேர்தலின்போது மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது தற்காலிக தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்கிறேன், சம்பள உயர்வு வழங்குகிறேன். தற்காலிக தூய்மை பணியாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்தார். அவருடைய வாக்குறுதியை நம்பி தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவருடைய கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தனர். அவரும் முதலமைச்சராகிவிட்டார். அவர் முதலமைச்சராகி 5 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. ஆனால் அவர் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விட்டார்.

தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளம் அவர்களின் குடும்பத்திற்கு மிகவும் பற்றாக்குறையாக உள்ளது. ஆகவே அவர்களின் வேலைக்கு ஏற்ப சம்பளம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம் வாழ்க்கை விசாரித்த நீதிபதிகள் மாதம் ரூ.26 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். ஆனால் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை இதுவரை மாநில அரசு கடைபிடிக்கவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆகவே தற்காலிகத் தூய்மை பணியாளர்களுக்கு மாதம் ரூ.26 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். இஎஸ்ஐ, பிஎப் வழங்க வேண்டும். தற்காலிக தூய்மை பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

அதேபோல் தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணி செய்ய தேவையான உபகரணங்கள் அனைத்தையும் வழங்க வேண்டும். அவர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து மாநகரம் முழுவதும், நகரம் முழுவதும், பஞ்சாயத்துகள் முழுவதும் தூய்மை செய்து வருகிறார்கள். அவ்வாறு பணியில் ஈடுபடும் அவர்களுக்கு பாதுகாப்பாக முகக்கவசம், கையுறை, கால் உறை, துடைப்பம் உள்ளிட்டவை வழங்க வேண்டும்.

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இன்றோடு ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இன்று நூதன முறையில் பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். போராட்டத்தில் ஈடுபடும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணிக்கு செல்லாததால் சித்தூர் மாநகரத்தில் ஆங்காங்கே குப்பைகள் மழை போல் குவிந்து வருகிறது. இதனால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். அவர்களுக்கு பல்வேறு நோய்கள் வர காரணமாகிவிடும். ஆகவே உடனடியாக எங்கள் கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால், மாநகர் முழுவதும் நாறிவிடும்.

இதனை கருத்தில் கொண்டு மாநில அரசு உடனடியாக தற்காலிகத் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தற்காலிக தூய்மை பணியாளர்களின் ஊழியர் சங்க நகரத் தலைவர் மணி, செயலாளர் கோபி, பொருளாளர் சந்திரா உள்பட ஏராளமான தற்காலிக தூய்மை
பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு பிச்சை எடுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post சித்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி 7வது நாளாக தற்காலிக தூய்மை பணியாளர்கள் பிச்சை எடுத்து நூதன போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Chittoor ,Chittoor Corporation ,Chittoor Municipal Corporation ,AITUC ,Dinakaran ,
× RELATED நடைபெற உள்ள பொதுத்தேர்தலில்...