×

ஸ்ட்ரைக் எதிரொலி: பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு..!!

சென்னை: பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று முதல் தமிழகம் முழுவதும் அண்ணா தொழிற்சங்கம் மற்றும் சிஐடியு தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. எனினும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகம் முழுவதுமாக பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 97.92% அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகத்தில் 15,728 பேருந்துகளில் 15,401 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் 99.29% மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இதனிடையே, பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படவுள்ள நிலையில், அந்த பேருந்துகள் இயக்குவதற்கும் தமிழக அரசு முன்கூட்டியே தற்காலிக பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பயிற்சி பெற்றவர்கள் அசல் ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டையுடன் போக்குவரத்து கழகத்தை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு உடனடியாக ஓட்டுநர் பயிற்சி மற்றும் நடத்துனர் பயிற்சி சோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஸ்ட்ரைக் எதிரொலி: பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,CHENNAI ,Tamil Nadu government ,Pongal festival ,Anna union ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...