×

மெட்ரோ ரயில் பணியால் மயிலாப்பூர் லஸ் கார்னரில் நெரிசலில் சிக்கிய வாகனங்கள்; பொதுமக்களின் கோரிக்கை ஏற்று தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் நிறுத்தி வைப்பு

சென்னை: மயிலாப்பூரில் மெட்ரோ ரயில் சுரங்கப்பணிக்காக முன் அறிவிப்பின்றி செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றத்தை கண்டித்து, லஸ் கார்னர் பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று திடீரென போராட்டம் நடத்தினர்.

அப்போது, நடந்த பேச்சுவார்த்தையில் பொங்கல் பண்டிகை வரை தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் நிறுத்தி வைக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாக பொது மேலாளர் ரவிக்குமார் தெரிவித்தார். பொதுமக்களின் கோரிக்கைகளை தீர்த்து வைத்த போக்குவரத்து போலீசாருக்கு வியாபாரிகள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் மெட்ரோ ரயில் சுரங்கப்பணி காரணமாக ராயப்பேட்டை அஜந்தா சந்திப்பில் உள்ள மேம்பாலம் மற்றும் மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் உள்ள திருமயிலை பறக்கும் ரயில் நிலையம் அருகே உள்ள பக்கிங்காம் கால்வாய் பாலம் இடிக்கப்பட உள்ளது. இதற்கான பணியை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடங்கியுள்ளது.

மயிலாப்பூருக்கு செல்ல இந்த இரண்டு பாலங்களும் மிக முக்கியம். அதேநேரம், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ராயப்பேட்டை அஜந்தா மேம்பாலம் மற்றும் திருமயிலை பறக்கும் ரயில் நிலையம் அருகே உள்ள பக்கிங்காம் கால்வாய் பாலம் வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மாற்று பாதையில் மாநகர போக்குவரத்து போலீசார் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர்.

மயிலாப்பூரை இணைக்கும் முக்கிய பிரதான சாலைகள் மூடப்பட்டதால் எந்த பொது போக்குவரத்து வாகனங்களும் மயிலாப்பூருக்கு செல்லாமல் லஸ் கார்னர் வழியாக லஸ் சர்ச் சாலையை கடந்து மந்தைவெளிக்கு செல்லும் வகையில் மாற்றப்பட்டது. அதேபோல் மந்தைவெளியில் இருந்து வரும் வாகனங்கள் மயிலாப்பூர் சாய்பாபா கோயில் சாலை, ஆழ்வார்பேட்டை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாற்றம் செய்யப்பட்ட சாலைகள் அனைத்தும் குறுகிய சாலைகள், அதில் மாநகர பேருந்துகள் செல்ல போதுமான இடவசதி இல்லை.

சாலை ஆக்கிரமிப்புகள் எதையும் அகற்றாமலும், எந்த திட்டமிடலும் இல்லாமல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுவாக மயிலாப்பூர் வர்த்தக பகுதியாக உள்ளது. அதேநேரம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், சாந்தோம் தேவாலயம், மயிலாப்பூர் சாய் பாபா கோயில், ராமகிருஷ்ணா மடம் போன்றவை முக்கிய சுற்றுலா இடங்களாக உள்ளன. இதனால் ஒவ்வொரு நாளும் மயிலாப்பூர் பகுதிக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதை நம்பி சிறு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை உள்ளனர்.

பல மாதங்களுக்கு செய்யப்படும் போக்குவரத்து மாற்றம் குறித்து மாநகர போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், மெட்ரோ ரயில் அதிகாரிகள் யாரும் வியாபாரிகள் சங்கத்திடமும், பொதுமக்களிடமும் எந்தவித கருத்தும் கேட்காமல், தன்னிச்சையாக சென்னையின் பிரதான பகுதியான மயிலாப்பூர் பகுதிக்கு எந்தவித வாகனங்களும் வராதபடி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதாக பொதுமக்கள் சரமாரியாக குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து தகவல் வெளியானதும், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர், துணை கமிஷனர் மகேஷ்குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு பொதுமக்களின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. கூடுதல் கமிஷனர் சுதாகர், மயிலாப்பூர் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். அதில், கல்வி வாரு தெருவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தினார்.

சில டிராவல்ஸ் நிறுவனங்கள் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைத்திருந்தன. அந்த வாகனங்கள் நிறுத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன. மேலும், 150 போக்குவரத்து போலீசார் மயிலாப்பூர் பகுதியில் குவிக்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டன. மயிலாப்பூர் ரயில்நிலையம் நுழைவாயில் அருகே மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில் பல மாதங்களாக பள்ளம் தோண்டிய பின்னர், மண் முழுவதையும் சாலையில் மலைபோல கொட்டியிருந்தனர். அதை போக்குவரத்து போலீசார், மாநகராட்சி அதிகாரிகளிடம் சொல்லி உடனடியாக அகற்றினர்.

இதனால் நேற்று காலை முதல் வாகனங்கள் சீராக இயங்கின. அதேநேரத்தில், போக்குவரத்து மாற்றத்தை கண்டித்து திருமயிலை வியாபாரிகள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் லஸ் கார்னர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மயிலாப்பூரில் அனைத்து கடைகளையும் மூடி வியாபாரிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

முன் அறிவிப்பின்றி நடந்த போராட்டதால் லஸ் கார்னர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த மயிலாப்பூர் உதவி கமிஷனர் சகாதேவன் தலைமையிலான போலீசார் வந்து, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் போக்குவரத்து மாற்றத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் நடத்துவோம் என்றனர்.

இதுகுறித்து போலீசார் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும், மெட்ரோ ரயில் அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். அதன்படி மெட்ரோ ரயில் நிர்வாக பொது மேலாளர் ரவிக்குமார் நேற்று மாலை 4 மணிக்கு அங்கு வந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, திருமயிலை வியாபாரிகள் சங்க தலைவர் பாஸ்கர் மற்றும் சந்திரசேகரன் தலைமையில் 10 பேர் மெட்ரோ ரயில் நிர்வாக பொது மேலாளர் ரவிக்குமாரிடம், லஸ் கார்னரில் இருந்து கச்சேரி சாலைக்கு வாகனங்கள் தடையின்றி செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

போக்குவரத்து மாற்றம் செய்யும் போது மயிலாப்பூர் பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் கலந்து ஆலோசனை நடத்த வேண்டும். போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரம் பாதிக்கப்படாமல் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் நடந்து செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் வருவதால் அதுவரை போக்குவரத்து மாற்றத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, மெட்ரோ ரயில் நிர்வாக பொது மேலாளர் ரவிக்குமார், பொங்கல் பண்டிகை வரை தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் திரும்ப பெறப்படும். பொங்கல் முடிந்ததும் மீண்டும் பழையபடி மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். அதேநேரம், மயிலாப்பூர் வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில் தடை செய்யப்பட்ட பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் 5 அடிக்கு வழி ஏற்பாடு செய்ய தரப்படும் என்று உறுதி அளித்தார்.

அதைதொடர்ந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது குறித்து திருமயிலை வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனரிடம் தங்களது மனுவை நேற்று இரவு அளித்தனர். போக்குவரத்து போலீசாரின் மின்னல் வேக நடவடிக்கையால், அதிகாரிகளுக்கு வியாபாரிகளும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

The post மெட்ரோ ரயில் பணியால் மயிலாப்பூர் லஸ் கார்னரில் நெரிசலில் சிக்கிய வாகனங்கள்; பொதுமக்களின் கோரிக்கை ஏற்று தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் நிறுத்தி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Les Corner ,Mayilapur ,Metro Rail Mission ,Chennai ,Las Corners ,Metro ,Pongal festival ,Las Corner ,Dinakaran ,
× RELATED சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை