×

போகி பண்டிகையை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்கள் எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்

 

திருவாரூர், ஜன. 10: திருவாரூர் மாவட்டத்தில் போகி பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருட்கள் எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லாத பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையை கொண்டாடி வந்தனர்.

ஆனால் தற்போது பழைய பொருட்களாக பிளாஸ்டிக் மற்றும் செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர்கள், டியூப்கள் மற்றும் ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றினை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்கள் காரணமாக மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களும் ஏற்படுகிறது.

இதுமட்டுமின்றி வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்பட்டு விபத்துகளும் ஏற்பட காரணமாக இருந்து வருகிறது. மேலும் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதமும் ஏற்படுகிறது. எனவே இந்த போகிப் பண்டிகையின்போது திருவாரூர் மாவட்டத்தில் பழைய பொருட்களாக பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

The post போகி பண்டிகையை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்கள் எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Bogi festival ,Tiruvarur ,Collector ,Sarusree ,Bogi ,Tiruvarur district ,Pongal ,
× RELATED வெப்பத்தின் தாக்கத்தால் உடல் அயற்சி...