×

சாலையில் கால்நடைகள் திரிவதை தடுக்க ஆனையூரில் ஆலோசனை கூட்டம்

சிவகாசி, ஜன. 10: சிவகாசி- திருவில்லிபுத்தூர் சாலையில் கால்நடைகள் சுற்றி திரிவதை தடுக்க, நேற்று ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிவகாசி- திருவில்லிபுத்தூர் சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது. இதனை தடுக்கும் விதமாக சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் உத்தரவின்பேரில், ஆனையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிநாராயணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சி செயலாளர் நாகராஜ் முன்னிலை வகித்தார். ரிசர்வ்லைன், இந்திராநகர், முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த கால்நடைகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், எப்போதும் பரபரப்பாக காணப்படும் சிவகாசி- திருவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம், ரிசர்வ்லையன் பகுதியில் எந்நேரமும் கால்நடைகள் சுற்றி திரிவதால் வாகனங்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது.

வாகனங்களின் விபத்துகளை தடுக்க, சாலைகளில் கால்நடைகளை அவிழ்த்து விடக்கூடாது. அதை பாதுகாப்பாக கட்டி பராமரிக்க வேண்டும். இதை மீறி நடக்கும் உரிமையாளர்களின் கால்நடைகளைப் பறிமுதல் செய்வதோடு ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் . மேலும் கால்நடை உரிமையாளர்கள் மீது காவல் நிலையத்தின் மூலம் வழக்குப்பதிவு செய்யப்படும் என வலியுறுத்தப்பட்டது.

The post சாலையில் கால்நடைகள் திரிவதை தடுக்க ஆனையூரில் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Anyur ,Sivakasi ,Anayur panchayat council ,Sivakasi-Tiruvilliputhur ,Sivakasi-Tiruvilliputhur road ,Anyayur ,Dinakaran ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை