×

57 அறிவிப்புகளுக்கான பணி தீவிரம் மாநகராட்சி பட்ஜெட்டில் வெளியிட்ட 82 அறிவிப்புகளில் 18 நிறைவேற்றம்: மேயர் பிரியா தகவல்

சென்னை, ஜன.10: இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மேயர் வெளியிட்ட 82 அறிவிப்புகளில் 18 நிறைவேற்றப்பட்டு 57 அறிவிப்புகளுக்கான பணிகள் நடந்து வருகிறது என்று மேயர் பிரியா கூறினார். சென்னை மாநகராட்சியில் 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மேயர் பிரியாவின் அறிவிப்புகளின் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ரிப்பன் கட்டிட வளாக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மேயர் பிரியா தலைமை வகித்தார்.

அப்போது மேயர் பிரியா பேசியதாவது: சென்னை மாநகராட்சியில் 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மேயர் மூலம் 82 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் கல்வித்துறை தொடர்பான 27 அறிவிப்புகளில் 7 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 18 அறிவிப்புகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. மீதமுள்ள 2 அறிவிப்புகளுக்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. பொது சுகாதாரத்துறை தொடர்பான 8 அறிவிப்புகளில் 3 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டு, 5 அறிவிப்புகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. திடக்கழிவு மேலாண்மைத் துறை தொடர்பான 5 அறிவிப்புகளுக்கான பணிகள், இயந்திரப் பொறியியல் துறை தொடர்பான 7 அறிவிப்புகளில் 1 அறிவிப்பு நிறைவேற்றப்பட்டு, மீதமுள்ள 6 அறிவிப்புகளுக்கான பணிகள் நடந்து வருகிறது.

பேருந்து சாலைகள் துறை தொடர்பான 2 அறிவிப்புகளுக்கான பணிகள் நடக்கிறது. மழைநீர் வடிகால் துறை தொடர்பான 4 அறிவிப்புகளில் 1 அறிவிப்பு நிறைவேற்றப்பட்டு, 3 அறிவிப்புகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. பூங்காத்துறை தொடர்பான 4 அறிவிப்புகளுக்கான பணிகளும், கட்டிடத்துறை தொடர்பான 7 அறிவிப்புகளில் 5 அறிவிப்புகளுக்கான பணிகளும் நடந்து வருகிறது. மொத்தம் 82 அறிவிப்புகளில் 18 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டு, 57 அறிவிப்புகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 7 அறிவிப்புகளுக்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post 57 அறிவிப்புகளுக்கான பணி தீவிரம் மாநகராட்சி பட்ஜெட்டில் வெளியிட்ட 82 அறிவிப்புகளில் 18 நிறைவேற்றம்: மேயர் பிரியா தகவல் appeared first on Dinakaran.

Tags : Mayor ,Priya ,Chennai ,Chennai Corporation ,Mayor Priya ,Dinakaran ,
× RELATED ரத்னம் விமர்சனம்