×

மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கு முடித்துவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன. 10: சென்னை மவுலிவாக்கத்தில் நடந்த கட்டிட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக பொருளாளராக இருந்தபோது தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கடந்த 2014 ஜூன் மாதம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 61 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர். அருகில் இருந்த மற்றொரு 11 மாடி கட்டிடம் 2014 நவம்பர் மாதம் அரசால் இடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, அப்போது முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டார். அத்துடன், நீதிபதி ரகுபதி தலைமையில் ஒருநபர் ஆணையத்தையும் அமைத்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணை திருப்தி அளிக்கும் வகையில் இல்லை எனக் கூறி இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அப்போது திமுக பொருளாளராக இருந்த தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, கட்டிட விபத்து சம்பவம் தொடர்பான வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. தற்போது இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க காரணமும் இல்லை என்பதால் வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கோரினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த இந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

The post மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கு முடித்துவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CBI ,Maulivakkam ,Chennai ,Court ,Chief Minister ,M.K.Stalin ,DMK ,Mauliwak, Chennai ,Borur ,High ,Dinakaran ,
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான...