×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ₹1 கோடியை தாண்டிய வர்த்தகம் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி பொய்கை மாட்டுச்சந்தையில் விற்பனை களைகட்டியது

வேலூர், ஜன.10: வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் பொங்கல் பண்டிகையொட்டி வழக்கத்தை விட அதிகளவில் கால்நடைகள் குவிந்தன. அதற்கேற்ப வர்த்தகமும் ₹1 கோடியை தாண்டியதால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூரு மற்றும் கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் பொங்கலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் வழக்கத்தை விட நேற்று கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளும், 500க்கும் மேற்பட்ட ஆடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. நாட்டு கோழிகளும் அதிகளவில் விற்பனைக்காக குவிந்ததால் சந்தை களைக்கட்டியது.

கால்நடைகள் விற்பனை தவிர வரும் 16ம் தேதி மாட்டுப்பொங்கல் பண்டிகை என்பதால் கால்நடைகளுக்கான கயிறுகள், கழுத்து மணிகள், சங்குகள் கோர்த்த கயிறு, சிறிய அளவிலான பெயின்ட் டின்கள், அலங்கார பிளாஸ்டிக் வண்ண பூக்கள் என கால்நடைகளை அலங்கரிக்கும் பொருட்களின் வியாபாரமும் முன்கூட்டியே களைக்கட்டியது. இதன் காரணமாக நேற்று ஒட்டுமொத்தமாக சுமார் ₹1 கோடியை தாண்டி வர்த்தகம் நடந்ததால் விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘பொய்கை மாட்டுச்சந்தையில் இன்று(நேற்று) 2000க்கும் மேற்பட்ட மாடுகள், 500க்கும் மேற்பட்ட ஆடுகள், நாட்டு கோழிகள் சந்தையில் குவிந்தன. வர்த்தகத்தை பொறுத்தவரை பொங்கல் பண்டிகைக்கு முந்தைய சந்தை என்பதால் கடந்த வாரத்தை விட இந்த வாரம் வியாபாரம் படுஜோர்தான். கறவை மாடுகளுடன், காளைகளும் அதிகளவில் விற்பனை நடந்துள்ளது. நாட்டு கோழிகள் அதிகளவில் கொண்டுவரட்டது. இதனால் விற்பனை களைக்கட்டியது’ என்றனர்.

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ₹1 கோடியை தாண்டிய வர்த்தகம் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி பொய்கை மாட்டுச்சந்தையில் விற்பனை களைகட்டியது appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Poigai Cattle Market ,Vellore ,Pongal ,Poigai ,Cattle Market ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பொய்கை மாட்டுச்சந்தையில் வரத்து...