×

அண்ணாமலையார் கோயிலுக்கு நிலம் தானம் வழங்கிய கல்வெட்டு கண்டெடுப்பு விஜயநகர பேரரசு காலத்தை சேர்ந்தது கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே

திருவண்ணாமலை, ஜன.10: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருவிழா நடத்த, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிலம் தானமாக வழங்கப்பட்ட விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை அடுத்த கடம்பூர் கிராமத்தில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட கல்வெட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட வரலாறு நடுவத்தின் செயலாளர் தாசில்தார் பாலமுருகன் மற்றும் சி.பழனிசாமி, சிற்றிங்கூர்ராஜா ஆகியோர், கடம்பூர் கிராமத்தில் நேரடி கள ஆய்வு நடத்தினர். அப்போது, கடம்பூர் கிராமத்தில் உள்ள வேம்பியம்மன் கோயில் எதிரில் உள்ள கற்பலகையில் விஜயநகர பேரரசின் சீரங்க மகாதேவர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் ச.பாலமுருகன் தெரிவித்ததாவது: கடம்பூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு சுமார் 8 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்டது. முன்பக்கம் சூரியன் சந்திரன், திருவண்ணாமலை மலையை குறிக்கும் முக்கோண வடிவிலான சிற்பம், பெரிய அளவு சூலமும் உள்ளது. பின்பக்கம், 40 வரிகளில் கல்வெட்டு காணப்படுகிறது. விஜயநகர அரசர் சீரங்கமகாதேவரின் 3 ஆம் ஆண்டான கடந்த 1675ம் ஆண்டில் இல்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. அதில், சீரங்க தேவமகாதேவர் உத்தரவுப்படி, செவ்வப்பநாயக்கர் தருமமாக வேட்டவலம் ஜமீனைச் சேர்ந்த தாண்டவ வாணாதிராயர் திருவண்ணாமலை திருக்கோயிலுக்கு ஆவணி மாதம் மூலநட்சத்திரத்தின் போது, நடைபெறும் ஏழாம் நாள் திருவிழாவிற்கு உபயமாக முடியனூர் பற்றில் உள்ள கடம்பூர் கிராமத்தில் குறிப்பிட்ட நான்கு எல்லைக்குள் உள்ள நிலம் காணியாட்சியாக விடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிலத்தை கைக்கொண்டு ஒவ்வொரு வருஷமும் வேட்டவலம் வாணாதிராயர் திருக்கோயில் திருவிழாவிற்கு பொன்னும் நெல்லும் அளித்து திருவிழாவை நடத்தி வரவேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தெரியவருகிறது. இந்த தர்மத்திற்கு தீங்கு நினைப்பவர்கள் கங்கை கரையிலே காராம் பசுவை கொன்ற பாவத்திலே போகக்கடவார்கள் என்றும் ஒம்படைக் கிளவியில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள கடம்பூர் கிராமத்து நிலத்தை, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் திருவிழா நடத்த காணியாட்சியாக விட்ட செய்தியும், அந்த ஏற்பாட்டை வேட்டவலம் ஜமீன்தார் செய்து வரவேண்டும் என்ற செய்தியும் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது. திருவண்ணாமலை கோயிலுக்கு நிலதானம் அளித்த கல்வெட்டுகள், திருவண்ணாமலையைச்சுற்றி 60க்கும் மேற்பட்ட ஊர்களில் கிடைத்து வருகின்றன. அதன்மூலம், திருவண்ணாமலை கோயிலும் ஊரும் எல்லா காலங்களிலும் சிறப்பும் முக்கியத்துவமும் பெற்றிருந்தது தெரியவருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post அண்ணாமலையார் கோயிலுக்கு நிலம் தானம் வழங்கிய கல்வெட்டு கண்டெடுப்பு விஜயநகர பேரரசு காலத்தை சேர்ந்தது கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே appeared first on Dinakaran.

Tags : Annamalaiyar Temple ,Manalurpet ,Kallakurichi ,Thiruvannamalai ,Tiruvannamalai Annamalaiyar temple festival ,Kallakurichi district ,Tiruvannamalai Annamalaiyar temple ,Kadampur village ,Manalurpet, Kallakurichi district ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார்...