×

இந்தியா கூட்டணியில் உபி, மகாராஷ்டிராவில் தொகுதி பங்கீடு பேச்சு

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. முதற்கட்டமாக ஆம்ஆத்மியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்னிக் இல்லத்தில் உபி, மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது. ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான்குர்ஷித் ஆகியோர் பங்கேற்றனர். மகாராஷ்டிரா மாநில தொகுதி பங்கீடு கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் ஜிதேந்திர அவ்ஹாத், சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு சார்பில் சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் 26 தொகுதிகளையும், சிவசேனா 23 தொகுதிகளையும் ஒதுக்க கேட்கிறது. தேசியவாத காங்கிரஸ் கருத்து வெளியே தெரிவிக்கப்படவில்லை. ஜனவரி 14 அல்லது 15ம் தேதி சோனியா, சரத்பவார், உத்தவ் தாக்கரே தொகுதி பங்கீட்டை இறுதி செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், உபியில் உள்ள 80 தொகுதிகளில் பங்கீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியது. சமாஜ்வாடி கட்சி சார்பில் ராம்கோபால்யாதவ், ஜாவத் அலி ஆகியோர் பங்கேற்றனர். வரும் 12ம் தேதி மீண்டும் பேச்சு நடத்தி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* கார்கே இன்று அவசர ஆலோசனை
இந்தியா கூட்டணியில் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று டெல்லியில் அவசர ஆலோசனை நடத்துகிறார். ஜன.15ம் தேதிக்குள் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.

The post இந்தியா கூட்டணியில் உபி, மகாராஷ்டிராவில் தொகுதி பங்கீடு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Ubi ,New Delhi ,India Alliance ,Lok Sabha ,Amaatmi ,Congress ,Mughul ,Delhi ,Maharashtra ,
× RELATED இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை...