×

சில்லி பாய்ன்ட்…

* ஐஎஸ்பிஎல் ஏலம்
இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) டென்னிஸ் பந்து டி10 கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க உள்ள 6 அணிகளையும் நடிகர், நடிகைகள் வாங்கி உள்ளனர். இந்நிலையில், இணை உரிமையாளர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் நடைபெறஉள்ளது. அதில் பங்கேற்க விரும்பும் தொழில் நிறுவனங்கள், நபர்கள் ஜன.21-24க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அடிப்படை விலை ரூ.10 லட்சம். மேலும் தகவலுக்கு: www.ispl-t10.com

* கிடாம்பி வெற்றி
கோலாலம்பூரில் நேற்று தொடங்கிய மலேசிய ஓபன் பேட்மின்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் (30 வயது, 24வது ரேங்க்) – இந்தோனேசிய வீர் ஜோனதன் கிறிஸ்டி (26 வயது, 5வது ரேங்க்) மோதினர். கிடாம்பி 12-21, 21-18, 21-16 என்ற செட் கணக்கில் வென்றார். இப்போட்டி 1 மணி, 5 நிமிடங்களுக்கு நடந்தது. மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தனிஷா கிராஸ்டோ – அஸ்வினி பொன்னப்பா இணை 21-13, 21-10 என நேர் செட்களில் மலேசியாவின் பிரான்சிஸ்கா கார்பெட் – அலிசன் லீ ஜோடியை 38 நிமிடங்களில் வீழ்த்தியது.

* பாகிஸ்தான் டி20 அணியின் துணை கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.
* கால்பந்து உலகின் மாமன்னன் என்று புகழப்பட்ட ஜெர்மனியின் ஃபிரான்ஸ் பெக்கன்பாவுர் (78) நேற்று காலமானார். இவர் தலைமையின் கீழ் ஜெர்மனி 1974ம் ஆண்டு பிஃபா உலக கோப்பையை வென்றது.

* லீக் சுற்று முடிந்தது
அல்டிமேட் கோகோ லீக் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் சென்னை குயிக் கன்ஸ், குஜராத் ஜயன்ட்ஸ், ஒடிஷா ஜக்கர்நாட்ஸ், தெலுங்கு யோதாஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. கடைசி 2 இடங்களை பிடித்த மும்பை கில்லாடிஸ், ராஜஸ்தான் வாரியர்ஸ் வெளியேற்றப்பட்டன. ஒடிஷா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் நாளை அரையிறுதி ஆட்டங்களும், ஜன.23ல் பைனலும் நடைபெற உள்ளது.

* ஆடுகளத்துக்கு அபராதம்
தென் ஆப்ரிக்கா- இந்தியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் அரங்கில் நடந்தது. முதல் நாளில் 23 விக்கெட் வீழ்ந்த நிலையில், இப்போட்டி 2வது நாளே முடிவுக்கு வந்தது. அபாரமாக வென்ற இந்தியா 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. நியூலேண்ட்ஸ் ஆடுகளம் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், அது குறித்து விசாரித்த ஐசிசி ஒரு அபராதப் புள்ளியை விதித்துள்ளது. இப்படி ஒரு களம் 5 ஆண்டுகளில் 6 தரக்குறைவு புள்ளிகளை பெற்றால் அங்கு ஓராண்டுக்கு எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியையும் நடத்த முடியாது.

* எம்ஓபி வெற்றி
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பல்வேறு மண்டல கல்லூரிகளுக்கு இடையே ‘ஹேண்ட் பால்’ போட்டி நடந்தது. மாணவியருக்கான பைனலில் ஏ மண்டல அணியை 16-5 என்ற கணக்கில் வீழ்த்தி எம்ஓபி மகளிர் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. எம்ஓபி தரப்பில் நிவேதா, கிருத்திகா சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு உதவினர்.

* சோனியில் யுஎப்சி
தற்காப்பு கலை போட்டிகளில் ஒன்றான அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் (யுஎப்சி) போட்டி இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், மாலத்தீவுகள், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது. இந்தப் போட்டிகள் அனைத்தையும் 2028ம் ஆண்டு வரை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் பெற்றுள்ளது.

* அல்டிமேட் டிடி
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் 2024 தொடர் கோவா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது (ஜன.23-28). தரவரிசையில் முன்னணியில் உள்ள சத்யன் ஞானசேகரன் (இந்தியா), யுபின் ஷின் (கொரியா), கிறிஸ்டினா கால்பெர்க் (சுவீடன்) உள்பட டாப்-10 வீரர், வீராங்கனைகள் நேரடியாக தகுதிப் பெற்றுள்ளனர். ஒற்றையர், இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடைபெற உள்ளன.

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Tags : ISPL ,Indian Street Premier League ,Tennis Ball T10 Cricket Tournament ,Dinakaran ,
× RELATED டென்னிஸ் பந்தில் ‘ஸ்டிரீட் பாய்ஸ்’...