×

குஜராத் காந்திநகரில் உலகளாவிய வர்த்தக கண்காட்சி பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

காந்திநகர்: குஜராத்தின் காந்திநகரில் உலகளாவிய வர்த்தக கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. குஜராத்தின் காந்தி நகரில் 10வது துடிப்பான குஜராத் உலகளாவிய வர்த்தக கண்காட்சியை நடத்த அம்மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஹெலிபேட் மைதான கண்காட்சி மையத்தில் 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பல அரங்குகளுடன் மிக பிரமாண்டமாக நடத்தப்படும் இக்கண்காட்சியை தொடங்கி வைக்க 3 நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் வந்தார்.

மகாத்மா காந்தி மந்திரில் நேற்று அவர் மொசாம்பிக், திமோர் ஆகிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து, கண்காட்சி மையத்திற்கு வந்த பிரதமர் மோடியையும், மாநில முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோருக்கு கல்லூரி மாணவ, மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார். இன்றும் நாளையும் தொழில்நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்கும்.

இதில் ஆஸ்திரேலியா, தான்சானியா மொராக்கோ, மொசாம்பிக், தென் கொரியா, தாய்லாந்து, எஸ்தோனியா, வங்கதேசம், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, பின்லாந்து, நெதர்லாந்து, ரஷ்யா, ருவாண்டா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் வியட்நாகம் ஆகிய 20 நாடுகள் பங்கேற்க உள்ளன. 1000 கண்காட்சியாளர்கள் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்த உள்ளனர். குறிப்பாக, ஆராய்ச்சி துறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ‘மேக் இன் குஜராத்’, ‘ஆத்மநிர்பார் பாரத்’ என்கிற 13 கருப்பொருள்களில் 13 பிரிவுகளில் அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இதில் 133 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

* முன்னணி சிஇஓக்களை சந்தித்த மோடி
உலகளாவிய வர்த்தக கண்காட்சியையொட்டி, பிரதமர் மோடி நேற்று பல்வேறு முன்னணி நிறுவன சிஇஓக்களை சந்தித்து பேசினார். சுசுகி மோட்டார் கார்ப் நிறுவனத்தின் பிரதிநிதி இயக்குநரும் தலைவருமான தோஷிஹிரோ சுசுகி, அமெரிக்க சிப் தயாரிப்பு நிறுவமான மைக்ரான் டெக்னாலஜி நிறவன தவைர் சஞ்சய் மெஹ்ரோதா, டிபி வேர்ல்டு நிறுவனத்தின் தலைவர் அகமது பின் சுலயீம் உள்ளிட்டோர் பிரதமர் மோடி சந்தித்து இந்தியாவில் முதலீடு வாய்ப்புகள் குறித்தும் தொழில்துறையில் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் பேசினர்.

* யுஏஇ அதிபருடன் சாலைப் பேரணி
உலகளாவிய வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நயன் நேற்று அகமதாபாத் வந்தார். அவரை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு சென்று நேரில் வரவேற்றார். பின்னர் பிரதமர் மோடியும், ஷேக் முகமதுவும் 3 கிமீ தூரத்திற்கு சாலையில் பேரணியாக சென்றனர். அப்போது சாலையின் இருபுறமும் மக்கள் குவிந்து இரு தலைவர்களையும் உற்சாகமாக வரவேற்றனர். வரவேற்புக்காக, பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

The post குஜராத் காந்திநகரில் உலகளாவிய வர்த்தக கண்காட்சி பிரதமர் மோடி துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Modi ,Global Trade Fair ,Gandhi Nagar, Gujarat ,Gandhi Nagar ,Gandhinagar, Gujarat ,government ,Gujarat World Trade Fair ,Gandhi City, Gujarat ,PM Modi ,
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி