×

நாளை ‘வைப்ரண்ட் குஜராத்’ சர்வதேச மாநாடு: ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி ‘ரோட் ஷோ’.! அகமதாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

அகமதாபாத்: காந்தி நகரில் நாளை ‘வைப்ரண்ட் குஜராத்’ சர்வதேச மாநாடு தொடங்க உள்ளதால் இன்று அகமதாபாத்தில் ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி நடத்தும் ‘ரோட் ஷோ’ பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடக்கிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் உள்நாட்டில் கூடுதல் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலீட்டாளர்கள் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குஜராத்தில் 10வது ‘வைப்ரண்ட் குஜராத்’ சர்வதேச மாநாடு காந்திநகரில் நாளை முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக செக் குடியரசின் பெட்ர் ஃபியாலா கலந்து கொள்கிறார். சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்த மாநாட்டில் தொடர்ந்து பங்கேற்று வந்த கனடா, இந்த ஆண்டு பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் காலிஸ்தான் தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்படுத்தியிருந்தது. அதனால் இந்த முக்கிய நிகழ்வில் கனடா பங்கேற்காதது பின்னடைவாக கருதப்படுகிறது. இருப்பினும் ஜப்பான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, வியட்நாம், சவுதி அரேபியா, தென்கொரியா உள்ளிட்ட 34 நாடுகள் இதில் பங்கேற்கும் என்பதால் இவ்வாண்டும் சிறப்பான முதலீடுகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு முன்னதாகவே இதுவரை 234 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சுமார் 10.31 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்பதாக பிரதமர் மோடி இன்று காலை குஜராத் வந்தடைந்தார்.

மேலும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று அகமதாபாத் வருகிறார். அவரை அகமதாபாத் விமான நிலையம் வரை சென்று பிரதமர் மோடி வரவேற்கிறார். அகமதாபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரோட் ஷோவில் பிரதமருடன் ஐக்கிய அரபு அமீரக அதிபரும் பங்கேற்கிறார். சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்திரா பாலம் வரை மூன்று கிலோமீட்டர் தூரம் நடக்கும் ரோட் ஷோவில் கலந்து கொள்கின்றனர். சர்வதேச மாநாடு நாளை தொடங்க உள்ளதால், மூன்று நாட்கள் பிரதமர் மோடி குஜராத்தில் தங்கியிருப்பார். அப்போது பல்வேறு நாடுகளின் உலகத் தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்களை சந்தித்துப் பேசுகிறார். ரோட் ஷோ மற்றும் சர்வதேச மாநாடு ஏற்பாடுகளால் அகமதாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

The post நாளை ‘வைப்ரண்ட் குஜராத்’ சர்வதேச மாநாடு: ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி ‘ரோட் ஷோ’.! அகமதாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Vibrant Gujarat' International Conference ,PM ,Road Show' ,UAE ,Prime ,Ahmedabad ,Gandhi City ,Road Show ,Modi ,India ,PM Modi 'Road Show' ,Dinakaran ,
× RELATED அயோத்தியில் பிரதமர் மோடி பிரசாரம்