×

சாரல் மழை எதிரொலி; திற்பரப்பில் குளு குளு சீசன்.! அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருவதால் திற்பரப்பில் குளுகுளு சீசன் நிலவி வருகிறது. அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திற்பரப்பு. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தி பாய்ந்தோடும் கோதையாறு, திற்பரப்பு பகுதியில் அருவியாக கொட்டுகிறது. அருவியின் மேல்பகுதியில் கோதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு படகு சவாரியும் மேற்கொள்ளப்படுகிறது. பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரும் கோதையாற்றில்தான் பாய்ந்து செல்கிறது.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் தற்போது வெயில் குறைந்து சாரல் மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் திற்பரப்பு பகுதியிலும் சாரல் மழை பெய்து வருவதால், குளுகுளு சீசன் நிலவுகிறது. அருவியிலும் கணிசமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். குளிர்ந்த காற்றும் வீசியதால் கிடுகிடுவென நடுங்கினாலும் குளியலை விட மனமில்லாமல் அருவியில் உற்சாகமாக குளித்து குதூகலித்தனர். மற்ற நாட்களை ஒப்பிடும்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் சுமாராகவே இருந்தது. இருப்பினும் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக மக்கள் வந்திருந்தனர். திற்பரப்பில் ஏற்கனவே குளிர்ந்த காலநிலை நிலவி வரும் நிலையில் தற்போது சாரல் மழை மீண்டும் திற்பரப்பு அருவியை குளிர்ச்சியடைய செய்துள்ளது.

The post சாரல் மழை எதிரொலி; திற்பரப்பில் குளு குளு சீசன்.! அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் appeared first on Dinakaran.

Tags : SARAL ,RAIN ,Kulasekaram ,Kanyakumari district ,Kalugulu ,Ruvi ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் பெரும்பாலான...