×

55 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி மழை நீரில் மூழ்கியது: டெல்டாவில் விடிய விடிய மழை கொட்டியது

நாகை: டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மழை பொழிந்தது. 55 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது. வடதமிழக கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் இன்று 3வது நாளாக சாரல் மழை தொடர்ந்தது. நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், திருமருகல், வேளாங்கண்ணியில் நேற்றிரவு 10 மணி வரை மிதமான மழை பெய்தது. வேதாரண்யத்தில் இன்று காலை சாரல் மழை பெய்தது. நாகை, கீழ்வேளூர், திருமருகல், திருக்குவளை, தலைஞாயிறு பகுதியில் 15 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி ெநற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. சிக்கல் சங்கமங்கலம் ஊராட்சி பழையனூர் மேல்பாதி மேலத்தெருவில் சேகர் என்பவருக்கு சொந்தமான காலனி வீட்டை பொங்கல் பண்டிகைக்காக நேற்று சுத்தம் செய்தனர். வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது மேற்கூரை இடிந்து விழுந்து 4 சிறுவர்கள் காயமடைந்தனர்.

இதையடுத்து 4 பேரையும் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து அஜீஸ் என்பவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் 3 சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி பகுதியில் இன்று அதிகாலை வரை சாரல் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 30,000 ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர் வயல்களில் தேங்கிய மழைநீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் இன்று காலை தொடர்ந்து சாரல் மழை பொழிந்தது. 5,000 ஏக்கர் சம்பா சாகுபடி வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தஞ்சை, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, வல்லம், பட்டுக்கோட்ைட, அதிராம்பட்டினம், ஒரத்தநாடு, கும்பகோணம், பாபநாசம் பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இன்று காலை சாரல் மழை பொழிந்தது.

மாவட்டம் முழுவதும் 5,000 ஏக்கர் சம்பா சாகுபடி வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. காரைக்கால் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், க.பரமத்தி பகுதியில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக நேற்றிரவு சாரல் மழை பெய்த நிலையில் இன்று காலை மிதமான மழை பொழிந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்யும் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று கலெக்டர் கற்பகம் விடுமுறை அறிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டம் துறையூர், தா.பேட்டை, தொட்டியம், முசிறி, சமயபுரம், துவாக்குடி, மணப்பாறை, துவரங்குறிச்சி மற்றும் மாநகரில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. இந்த மழை இன்று காலையும் தொடர்ந்து பெய்தது.

The post 55 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி மழை நீரில் மூழ்கியது: டெல்டாவில் விடிய விடிய மழை கொட்டியது appeared first on Dinakaran.

Tags : Delta ,Nagai ,Southeast Arabian Sea… ,Dinakaran ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...