×

3 பல்கலை.,களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய, தான் அமைத்த குழுக்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திரும்பப் பெற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை : 3 பல்கலை.,களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய, தான் அமைத்த குழுக்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்பப் பெற்றார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது திரும்பப் பெற்றுள்ளார் ஆளுநர் ரவி. தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் பணியிடம் காலியாக இருக்கும் பட்சத்தில், அவரைத் தேர்வுசெய்வதற்கு தேடுதல்குழு அமைக்கப்படும். அதில், பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர், ஆளுநர் தரப்பில் ஒருவர் இடம்பெறுவார்கள். இந்தக் குழு துணைவேந்தர் பணிக்காக வரப்பெறும் விண்ணப்பங்களைப் பரிசீலித்து தகுதியான மூவரின் பெயர்களை ஆளுநருக்குப் பரிந்துரைக்கும். அவர்களில் ஒருவரை ஆளுநர் நியமிப்பது வழக்கம்.

இதற்கிடையில் சென்னை பல்கலை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை, கோவை பாரதியார் பல்கலை ஆகியவற்றில் காலியாக இருக்கும் துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புவதில் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. அதில், “பல்கலைக்கழக மானியக்குழு பிரதிநிதி ஒருவரும் துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவில் இருக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.மேலும் சம்பந்தப்பட்ட மூன்று பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உறுப்பினர்களைக்கொண்ட நான்கு பேர் அடங்கிய தனித் தனிக் குழுக்களை, துணைவேந்தர்களைத் தேர்வு செய்வதற்காக அமைத்து உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரை முதலமைசர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அதேநேரம் உச்சநீதிமன்ற விசாரணையில் துணை வேந்தர் நியமனம் தொடர்பாக தமிழக அரசும், ஆளுநரும் பேசி சுமூக முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதனிடையே துணைவேந்தர்களை தேடுதல் செய்யும் குழுவில் யுஜிசி பிரதிநிதியை நீக்கி தமிழக அரசால் அரசாணை வெளியிட்டப்பட்டது. இந்த சூழலில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் தேடுதல் குழுவை திரும்ப பெறுவதாக ஆளுநர் மாளிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பு விவரங்களை சுட்டிக்காட்டி ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் தமிழக அரசின் நடவடிக்கை தேவை. பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர்களுடன் இணைந்து தேடுதல் குழுவை தமிழக அரசு நியமிக்கும் என நம்புகிறோம்” என கூறப்பட்டுள்ளது.

The post 3 பல்கலை.,களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய, தான் அமைத்த குழுக்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திரும்பப் பெற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Governor R. N. Ravi ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,Mu. K. ,Stalin ,Governor ,Ravi ,Tamil ,Nadu Universities ,Dinakaran ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...