×

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து நிவாரண வழக்கு: தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிரான மனு தள்ளுபடி.! உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த கோர விபத்தில் 27 பேர் உடல் கருகியும், சிதறியும் உயிரிழந்தனர். இதையடுத்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம் பட்டாசு, விபத்தில் பலியான ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிவாரண தொகையாக தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை விரிவாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மீண்டும் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கே வழக்கை மாற்றி அமைத்து உத்தரவிட்டது.

இதையடுத்து மீண்டும் வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், முந்தைய உத்தரவையே மீண்டும் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. மேற்கண்ட உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் ஓஹா மற்றும் உஜ்ஜன் புயான் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுபோன்ற ஆபத்தை விளைவிக்கும் பட்டாசு ஆலைகளை தொடர்ந்து கண்காணிப்பது என்பது மாநில அரசின் கடமையாகும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் குமணன், ‘இந்த விவகாரத்தில் மாநில அரசு சமுதாய அக்கறையுடன் தான் செயல்படுகிறது. இருப்பினும் இவ்வளவு தொகை தான் வழங்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் எப்படி அரசுக்கு நிர்ணயம் செய்ய முடியும்.

அதனை கண்டிப்பாக ஏற்க முடியாது. ஏனெனில் எதிர்காலத்தில் அது வழக்கமான ஒன்றாகிவிடும்’ என தெரிவித்தார். அப்போது மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள், ‘சமுதாய அக்கறை உள்ள அரசு என நீங்கள் கூறும்போது, உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியதும் உங்களது வேலை தானே’ என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை’ எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது உத்தரவிட்டனர். இதன் மூலம் இந்த விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முந்தைய உத்தரவு உறுதியாகியுள்ளது.

The post விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து நிவாரண வழக்கு: தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிரான மனு தள்ளுபடி.! உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : National ,Tribunal ,Supreme Court ,New Delhi ,Tamil Nadu government ,National Green Tribunal ,Virudhunagar ,Chaturthi, Virudhunagar district ,Dinakaran ,
× RELATED முக்குருத்தி தேசிய பூங்காவில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது!!