×

பெண்கள் 2023!

நன்றி குங்குமம் தோழி

அர்ச்சகரான பெண்கள்

தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் 1970ம் ஆண்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அனைத்து சாதிகளை சேர்ந்தவர்களும் உரிய முறையில் அர்ச்சகர் ஆவதற்காக படித்து தேர்வாகி அர்ச்சகராகலாம் என்கிற நடைமுறை அமலுக்கு வந்தது. இதில் அதிகமாக ஆண்களே அர்ச்சகர் ஆன நிலையில் பெண்களும் இந்த பணிகளுக்கு படிக்க தொடங்கினர். இவ்வாறு படித்த 3 பெண்கள் அர்ச்சகராக தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குள் செல்லலாம் என்றும் பெண்களை கோவிலுக்குள்ளே வரக்கூடாது என்றிருந்த நிலை மாறி தற்போது பெண்களும் கருவறைக்குள் சென்று அர்ச்சகராகலாம் என்று மாறியிருக்கிறது தமிழ்நாட்டில்.

யானைகள் ஆவணப்படத்திற்கு ஆஸ்கார் விருது

நீலகிரி முதுமலை புலிகள் பாதுகாப்பு சரணாலயத்தில் உள்ள பொம்மன், பெள்ளி என்ற பழங்குடி தம்பதி பொம்மி என்ற யானையை வளர்த்து வந்தனர். யானைக்கும் அந்த தம்பதிக்கும் இடையே உள்ள பாசத்தை உணர்வுபூர்வமாக ‘எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்று எடுக்கப்பட்டு ஓ.டி.டி தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்கியவர் தமிழகத்தை சேர்ந்த கார்த்திகி கொன்சால்வ்ஸ்.

இந்த வருடம் நடந்த ஆஸ்கார் விருது பட்டியலுக்கு இந்த ஆவணப்படம் அனுப்பப்பட்டு ஆஸ்கார் விருதையும் வென்றது. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இருந்து தயாரிக்கப்பட்டு ஆஸ்கார் விருது வென்றிருப்பதால் பல நாடுகளில் இருந்து இந்த தம்பதியினரையும், பொம்மி யானையையும் பார்க்க நீலகிரிக்கு செல்கின்றனர் மக்கள்.

நாகலாந்தில் இரு பெண்கள் வெற்றி

நாகலாந்து மாநிலத்தில் முதல் முறையாக இரு பெண்கள் தேர்தலில் வெற்றியடைந்துள்ளனர். 1963ம் ஆண்டிலிருந்து நாகலாந்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து வந்தாலும் அங்கு இதுவரை ஒரு பெண் கூட தேர்தலில் வெற்றி பெற்றதில்லை. இதற்கும் நாகலாந்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம். ஆனாலும் ஒரு பெண் கூட வெற்றி பெற முடியாத சூழ்நிலை அங்கு இருந்தது. இதனால் நாகலாந்தில் பெண்களின் நிலை மற்றும் அவர்களது உரிமைகள் என்பது பின்தங்கியே இருந்தது. இந்த குறை தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தீர்ந்துள்ளது. இதில் சல்ஹூதுவோனுவோ க்ரூஸ் மற்றும் ஹெகானி ஜகாலு என்ற இரு பெண்கள் முதன் முறையாக வெற்றியடைந்து சட்டமன்றத்துக்குள் நுழைந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் சிறந்த திருநங்கை ஐஸ்வர்யா

திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்து, அவர்களுக்குள் முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த 2021ம் ஆண்டிலிருந்து திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15ம் நாளில் சிறந்த திருநங்கை விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு தேர்வு செய்து ஒவ்வோர் ஆண்டும் வழங்குகிறது.

இந்த வருடத்திற்கான விருதை திருநங்கையர்களின் முன்னேற்றத்திற்காக கடந்த 22 ஆண்டுகளாக தனது கிராமியம் மற்றும் நாடக கலையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை புரிந்து, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ஐஸ்வர்யாவின் சிறந்த சேவையை பாராட்டி, தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது வழங்கப்பட்டது. நாடக துறையில் இருக்கும் அவர் கலைமாமணி விருது வாங்க வேண்டும் என்பதுதான் தன்னுடைய லட்சியம் என்பதாக கூறியுள்ளார்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் பழங்குடி பெண்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் கேரளாவை சேர்ந்த மின்னு மன்னி என்ற பழங்குடி பெண் இடம் பிடித்துள்ளார். இவர் விளையாடிய முதல் போட்டியில் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் பேசு பொருளாக மாறியிருக்கும் மின்னு மன்னிக்கு வயது 23 தான். கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆர்வத்திற்காக தினமும் இரண்டு மணி நேரம் நான்கு பேருந்துகள் மாறி கடும் பயிற்சிகளுக்கு பின்னால்தான் இந்திய அணியில் விளையாட இவருக்கு இடம் கிடைத்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் முதல் பெண் விமானி!

நீலகிரி மாவட்டத்தின் முதல் பெண் விமானி என்ற சிறப்பை பெற்றிருக்கிறார் ஜெயஸ்ரீ. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியை சேர்ந்த இவர் சிறு வயதிலிருந்தே விமானி ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்துள்ளார். அதோடு விமானி ஆவதற்கான தேடுதலிலும் இருந்திருக்கிறார். தொடர்ந்து முயற்சி செய்தவருக்கு தென் ஆப்பிரிக்காவில் விமானிக்கான பயிற்சியளிக்க இடம் கிடைத்தது. உடனே பயிற்சிக்கு கிளம்பிய அவர் திரும்ப வரும் போது நீலகிரி மாவட்டத்தின் விமானியாக இந்தியாவிற்கு வந்துள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசு

ஈரானை சேர்ந்த பெண்ணிய சமூக செயற்பாட்டாளரான நர்கீஸ் முகம்மது என்பவருக்கு இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. இந்த விருது அறிவித்த நேரம் பெண்களின் உரிமைகளுக்காக போராடியதற்காக அவர் சிறையில் இருந்துள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு பல ஆண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கு தற்போது தான் கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த கிளாடிய கோல்டன் என்பவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவத்திற்கான நோபல் பரிசு கடாலின் கரிகோ என்ற பெண்ணிற்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பேராசிரியர் ஆனிஹூலியர் என்பவருக்கும் கிடைத்துள்ளது.

முதல் முயற்சியிலேயே தேர்வான தமிழக பெண்

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வினை எழுதி அதில் முதல் முயற்சியிலேயே தேர்வானதோடு மாநில அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார் சென்னை கொளத்தூரை சேர்ந்த மாணவி ஏ.எஸ்.ஜீஜீ. இதிலும் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அகில இந்திய அளவில் முதல் நான்கு இடங்களையும் இஷிதா கிஷோர், கரிமா லோஹியா, உமா ஹாரதி, ஸ்மிருதி இஸ்ரா ஆகிய பெண்களே பிடித்துள்ளனர்.

ரக்பி போட்டியில் வெள்ளி வென்ற பெண்கள்

இந்த ஆண்டில் நடந்த ஆசிய ரக்பி போட்டியில் 18 வயதிற்குட்பட்ட பிரிவில் இந்திய ரக்பி அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. இதில் கலந்து கொண்ட 7 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த அக் ஷயா, திவ்யா இடம் பெற்றிருந்தனர். ரக்பி போட்டி பற்றி அதிக அளவில் தமிழகத்தில் விழிப்புணர்வு இல்லை. அதனால் மேலும் பல பெண்கள் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் எனச் சொல்கின்றனர் இந்த இரட்டையர்கள்

உலகப் பெண்கள் குத்துச் சண்டை போட்டியில் இந்தியாவிற்கு நான்கு தங்கம்!

டெல்லியில் நடந்த உலகப் பெண்கள் குத்துச் சண்டை போட்டியில் இந்திய அணிக்கு நான்கு தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. நான்கு தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியை சிறந்த அணியாக தேர்வு செய்துள்ளனர். இதில் சிறந்த குத்துச் சண்டை வீரராக நிகத் ஜரின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மற்ற இந்திய வீராங்கனைகள் லவ்லினா போர்கோஹெய்ன், நீத்து கங்காஸ், ஸ்வீட்டி பூரா ஆகியோர் தலா ஒரு தங்கப் பதக்கம் வென்றனர்.

திருநங்கைகளின் முதல் சலூன்

மும்பையில் ஏழு திருநங்கைகள் இணைந்து யூனிக் என்ற பெயரில் சலூன் கடை ஒன்றை திறந்துள்ளனர். இந்த கடைதான் திருநங்கைகள் தொடங்கிய முதல் சலூன் என்பதால் பலவிதங்களில் எதிர்ப்புகளை சந்தித்துள்ளனர். குறிப்பாக கடை வாடைகைக்கு கொடுக்க யாரும் முன் வரவில்லை. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகே இந்த கடையை திறந்துள்ளனர். பல எதிர்ப்புகள் இருந்தாலும் வாடிக்கையாளர்கள் இவர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

89 வயதில் டிகிரி

தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று சவுதர்ன் நியூ ஹோம்ஸ் பையர் யுனிவர்சிட்டி. இதில் படைப்பு மற்றும் எழுத்து துறையில் முதுகலைபட்டம் பெற்றுள்ளார் ஜோவான் டோனோ வான். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த முதுகலை பட்டத்தை இவர் பெறும் போது இவருக்கு வயது 89. பள்ளிப் படிப்பை முடித்த கையோடு ஜோவானுக்கு கல்யாணமாகி விட்டதால் கல்லூரி படிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு கனவாகவே இருந்தது. அவரது கனவை நினைவாக்க வேண்டும் என நினைத்தவர் 80 வயதில் தன் கல்லூரி படிப்பை தொடங்கியுள்ளார். 84 வயதில் பட்டப் படிப்பை முடித்த அவர் 89 வயதில் முதுகலை படிப்பையும் முடித்துள்ளார். இதோடு நில்லாமல் மேலும் படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

திருமதி உலக அழகி

அமெரிக்கா, லாஸ்வேகசில் நடைபெற்ற திருமதி உலக அழகிப் போட்டியில் 63 நாடுகளை சேர்ந்த திருமதிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் இந்தியா சார்பில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சர்கம் கெளஷல் கலந்து கொண்டு திருமதி உலக அழகி என்ற பட்டத்தை பெற்றுள்ளார். 21 வருடங்களுக்கு பிறகு திருமதி உலக அழகி பட்டம் இப்போது சர்கம் கெளஷல் மூலம் கிடைத்துள்ளதால் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவருடைய கணவர் கப்பல் படையில் பணியாற்றி வருகிறார்.

33% மகளிருக்கு இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்!

மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அனைத்து கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீடு மசோதா மூலம், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளில் சுழற்சி முறையில் பெண்களுக்கான தொகுதிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்காக அவை ஒதுக்கீடு செய்யப்படும். கிராம பஞ்சாயத்துகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் அரசு வேலை வாய்ப்புகளிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

மாவோயிஸ்ட் டூ அமைச்சர்

தற்போது நடந்த தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் முலுகு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான் தன்சார் அனுசுயா சீதக்கா. கோயா என்ற பழங்குடி இனத்தை சேர்ந்த இவர் இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார். இதற்கு முன்னர் இவர் பழங்குடி மக்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகளை எதிர்த்து போராடுவதற்காக மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்தார். பிறகு அதில் இருந்து வெளியே வந்த சீதக்கா தன் மக்களின் நலன்களுக்காக வழக்கறிஞர் ஆனார். அதிகாரத்திற்கு சென்றால் இன்னமும் மக்களுக்கு நல்லது செய்யலாம் என முடிவெடுத்தவர் தேர்தல் அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். தேர்தலில் வென்ற இவருக்கு எந்த மக்களின் நலனுக்காக வேலை செய்ய வேண்டும் என நினைத்தாரோ அந்த பழங்குடி நலத்துறையின் அமைச்சர் பொறுப்பு தேடி வந்துள்ளது.

கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு அர்ஜூனா விருது

விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பைச் செலுத்தி வரும் வீரர் மற்றும் வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சாரியா, மேஜர் தயான்சந்த், மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்படுகின்றன. 2023ம் ஆண்டிற்கான விளையாட்டு விருதுகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த சதுரங்க ஆட்டக்காரரான வைஷாலிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post பெண்கள் 2023! appeared first on Dinakaran.

Tags : kungkum doshi ,Tamil Nadu ,
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...