×

பழங்கால பொக்கிஷங்கள்!

நன்றி குங்குமம் தோழி

என்னதான் புதிது புதிதாக மார்டனாகவும் டிரெண்டியாகவும் பொருட்கள் மார்க்கெட்டில் விற்பனைக்கு இருந்தாலும், பழமையான வடிவமைப்பில் இருக்கும் பொருட்களை (antique designs) மக்கள் விரும்பி வாங்க தான் செய்கிறார்கள். காரணம், நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களுக்கான மதிப்பே தனி என்றும், அந்த டிசைன்களில் பொருட்கள் எளிதில் கிடைக்காது என்பார்கள். அப்படிப்பட்ட ரசனை கொண்டவர்களுக்காகவே, பழமை வாய்ந்த பொருட்களையே தேடிப் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர் ஆந்திரப் பிரதேசம், ராஜமுந்திரி பகுதியினை சேர்ந்த கீர்த்தனா மற்றும் அர்ச்சனா சகோதரிகள்.

‘‘நாங்க இருவருமே எம்.பி.ஏ பட்டதாரிகள். எனக்கு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைச்சது. ஆனால் எனக்கோ மற்றவர்களிடம் வேலை பார்க்க பிடிக்கவில்லை. அதனால் கிடைச்ச வேலையை வேண்டாம் என்று சொல்லிட்டேன். பொதுவா எங்க ஊரை ஆந்திர மாநிலத்தின் கலாச்சார மூலதனம் என்று சொல்லுவாங்க. இங்கு வாழும் மக்கள் இன்றும் பழமையினை பின்பற்றுபவர்கள். மேலும் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களிலும் அதே பழமை மற்றும் தொன்மையை பார்க்க முடியும்’’ என்று பேச ஆரம்பித்த ‘ரீவைண்ட் கேலரி’யின் நிறுவனர்களுள் ஒருவரான கீர்த்தனா, இந்த ஸ்டுடியோ துவங்கிய காரணம் மற்றும் அதற்கான பொருட்களை எங்கிருந்து பெறுகிறார்கள் என்பதை விளக்குகிறார்.

‘‘எல்லோருடைய வீட்டிலும் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு பரம்பரை பரம்பரையாக பயன்படுத்திய பொருட்களை பாதுகாத்து வைத்திருப்பார்கள். அதேபோல் எங்க வீட்டிலும் சில பழமையான பொருட்கள் இருந்தது. வெண்கலம் மற்றும் தேக்கினால் ஆன சில மரச் சாமான்களை நாங்க இன்றும் பயன்படுத்தி வருகிறோம். அதை பார்க்கும் போது எங்களுக்கு தோன்றுவது ஒரே விஷயம்தான். இவ்வளவு தரமான பொருட்கள் எப்படி அந்த காலத்தில் செய்தாங்க என்பதுதான்.

இப்போதெல்லாம் இது போல தரமான பொருட்கள் கிடைப்பது என்பது அரிது. அதே டிசைனில் கிடைத்தாலும், அதில் அதே தரத்தினை எதிர்பார்க்க முடியாது. அந்த பொருட்களை வாங்கி பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அப்படிப்பட்டவர்கள் சொல்லும் போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கும். அந்த நேரத்தில் தான் எனக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. நம்மிடம் இருக்கும் இந்த பழமை வாய்ந்த பொருட்களை ஏன் அதை விரும்புபவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாதுன்னு தோன்றியது. ஏனெனில் இது போல தரமான சாமான்கள் ஒரு சில இடங்களில் மட்டும் தான் கிடைக்கும். நானும் அந்த நேரத்தில் என் வேலையை ராஜினாமா செய்திருந்ததால், இந்த தொழிலில் ஈடுபடலாம்னு எண்ணம் ஏற்பட்டது’’ என்றவரை தொடர்ந்து பேச ஆரம்பித்தார் அர்ச்சனா.

‘‘இந்த பழமை பொருட்களை விற்கும் எண்ணத்தைப் பற்றி கீர்த்தனா என்னிடம் சொன்ன போது, எனக்கும் சரின்னு பட்டது. அதனால் எங்களின் பிசினஸ் குறித்து எங்க குடும்பத்தாரிடம் விவரித்தோம். அவர்களுக்கும் நாங்க சொன்ன ஐடியா பிடிக்க உடனே எங்களுடைய தொழிலுக்கு சம்மதம் தெரிவித்தனர். முதலில் எங்களிடம் தேவைக்கு அதிகமாக இருந்த சில பொருட்களைக் கொண்டுதான் ‘ரீவைண்ட் கேலரி’ என்னும் பெயரில் 2019ம் ஆண்டு துவங்கினோம். இது முழுக்க முழுக்க ஆன்லைன் ஷோரூமாகத் தான் ஆரம்பித்தோம். அதில் எங்களிடம் இருக்கும் பொருட்களை பதிவு செய்தோம். மக்களுக்கும் பிடித்து போக ஆர்டர் செய்ய ஆரம்பித்தார்கள்.

ஒரு கட்டத்தில் எங்களிடம் இருக்கும் பொருட்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, இதற்காக ஒரு பிரத்ேயக கடையினை திறக்க முடிவு செய்தோம். இரண்டு வருடத்திற்கு முன்பு, ரீவைண்ட் கேலரிக்கென பிரத்யேகமான கடை ஒன்றை துவங்கினோம்’’ என்று விளக்கியதோடு எங்கிருந்து இந்த பழமை வாய்ந்த பொருட்கள் சேகரிக்கின்றனர் என்பதையும் குறிப்பிட்டார்.

‘‘எங்க வீட்டில் இருந்த பொருட்கள் கொண்டு ஆரம்பித்தாலும், அதை மட்டுமே வைத்து பிசினஸ் செய்ய முடியாது என்பதால், எங்கள் ஊரில் உள்ள கடைகளில் கிடைக்கக்கூடிய பழைய பாத்திரங்கள், மரச்சாமாமான்கள், அழகுக்காக வைக்கப்படும் பூ ஜாடிகள், வாஸ்து குவளைகள் என அனைத்து விதமான பொருட்களும் தேடித் தேடி வாங்க ஆரம்பித்தோம். அதனை எங்க சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட போது எங்களுக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ் நாங்கள் எதிர்பார்க்காதது’’ என்றவர்கள் தங்களிடம் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கு பின்பும் ஒரு கதை இருப்பதாக குறிப்பிட்டனர். மேலும், ‘‘பல வருடங்களாக பயன்படுத்தி வரும் இந்த பொருட்களின் மதிப்பு பயன்படுத்துபவர்களுக்கு தெரியும்.

அதனால் நாங்க இந்தப் பொருள் வேண்டும் என்று கேட்டால் உடனே தூக்கி கொடுத்திட மாட்டார்கள். ஒரு சிலர்தான் இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப தங்களின் வீட்டை மாற்றி அமைக்க விரும்புவார்கள். அவர்களுக்கு பழைய பொருட்களை விற்கும் எண்ணமிருந்தால் அவர்களிடம் கேட்டு வாங்கி வருவோம். பின் அதில் ஏதேனும் குறை இருந்தால் அதனை சரி செய்து விற்பனை செய்வோம்.

உதாரணத்திற்கு ஒரு மரச்சாமான் விற்பனைக்கு வரும் போது, அது சில சமயம் நல்ல பயன்பாட்டில் இருப்பதாக இருக்கும். ஆனால் பெரும்பாலும், பல வருடங்களாக உபயோகிக்கப்படாமல் மூலையில் வைத்திருப்பார்கள். அது நல்ல நிலையில் இருக்குமான்னு தெரியாது. அதனால் அதன் தரத்தினை சரிபார்ப்போம். சின்ன சின்ன குறைகள் இருந்தால், அதை சரி செய்து, புதுப்பித்து விற்பனைக்காக பதிவு செய்வோம்.

பொதுவாக மக்கள் இரண்டு வகை உண்டு. ஒருவர் புதுமைக்கு ஏற்ப தங்களையும் தங்களிடம் இருக்கும் பொருட்களையும் மாற்றி அமைத்துக் கொள்வது. மற்றவர், என்னதான் புதுமை வந்தாலும், பழமையை தேடி தேடி வாங்குவது. எங்களுக்கு கிடைத்த வாடிக்கையாளர்கள் இந்த இரண்டாம் வகை. பல இடங்களில் தேடி அவர்களுக்கு கிடைக்காத சில அரிய பொருட்கள் எங்களிடம் இருப்பதாக சொல்கிறார்கள். மேலும் அவர்கள் கூறுவது, ‘பொருட்களை புதிதாக தயாரித்து, அதை பழமையானது என சொல்லி ஏமாற்றி விற்பனை செய்றாங்க, நாங்களும் அதனை நம்பி வாங்கிவிடுகிறோம். ஆனால், உங்களிடம் இருக்கும் பொருட்கள் அனைத்துமே தரமானவை. எளிதில் கிடைக்காதவை’ என்கின்றனர்.

எங்களிடம் இருக்கும் அனைத்து பொருட்களும் 200 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த பொருட்கள். காரணம் நாங்க ஆந்திரா மட்டுமில்லாமல், தமிழ் நாட்டிலிருந்து செட்டிநாடு சமையல் பாத்திரங்கள், உதய்பூரில் உள்ள அலங்கார பொருட்கள் என அந்தந்த மாநிலங்களில் அதிகம் பேசப்படும் பொருட்களை தேடிப் போய் வாங்குகிறோம். அதில் பிரியாணி பாத்திரம், இட்லி பாத்திரம் போன்ற சில சமையல் பாத்திரங்கள், அலங்கார பொருட்கள், மன்னர் காலத்து கட்டில்கள், ஸ்டூல்கள், வெண்கலத்திலான பூஜை பொருட்கள், சிலைகள், காபி டம்ளர் செட், சாம்பிராணி போட பயன்படுத்தும் குவளை, அடுப்புகள், தேக்கினால் ஆன சில மரச் சாமான்கள், மோர் கடையும் மத்துகள், நகைப் பெட்டிகள், ட்ரெஸ்ஸிங் டேபிள்கள், பழங்கால ஓவியங்கள், குழந்தைகளுக்கான வெண்கல விளையாட்டு சாமான்கள் என அனைத்து விதமான பொருட்களும் எங்களிடம் உள்ளது. இதனை தேடி வாங்கி அதை புதுப்பித்து விற்பனை செய்கிறோம்.

ஆரம்பத்தில் நாங்க இருவர் மட்டுமே பார்த்து வந்தோம். ஆர்டர்கள் அதிகரித்ததால், சமூக வலைத்தள பக்கத்தை பார்த்துக் கொள்வது, ஆர்டர்கள் எடுப்பது, டெலிவரி செய்வது என எங்களிடம் 12 பேர் வேலை பார்க்கிறார்கள்’’ என்றவர்களிடம், தரம், அதன் தொன்மையை தவிர்த்து உபயோகித்த பொருட்களை மக்கள் விரும்பி வாங்க காரணம் பற்றி கேட்டதற்கு…

‘‘பழமையான பொருட்கள் என்றாலே அதன் மேல் தனி ஆர்வம் காட்டும் மக்கள் உள்ளனர். அவர்களுக்கு அதனை முன்பு யார் பயன்படுத்தினாங்க, எப்படி பயன்படுத்தினாங்க என்பதெல்லாம் முக்கியம் கிடையாது. அவர்களுக்கு தேவை அந்த பொருட்களின் தரம். அது நிஜமான தொன்மையான பொருளா என்று தான் பார்ப்பார்கள். எங்களுக்கு உலகின் பல பகுதியிலிருந்து கஸ்டமர்ஸ் இருக்காங்க. ஒரு முறை ெபாருட்களை வாங்கியவர்கள் மீண்டும் மீண்டும் எங்களை நாட காரணம் அதன் தரம்.

சிலர் இந்த பொருள் வேண்டும் என்று கேட்பார்கள். அவர்கள் கேட்ட பொருள் கிடைத்தால், உடனடியாக அவர்களுக்கு சொல்லிடுவோம். அவர்களும் வாங்கிக் கொள்வாங்க. இதுபோல் காத்திருந்து பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களும் உள்ளனர். இது தான் நம்முடைய தொழிலுக்கு கிடைத்த வெற்றி. நாங்க முதன் முதலில் விற்பனை செய்த பழமை வாய்ந்த பொருள் என்றால் அந்த காலத்தில் பயன்படுத்திய ரசம் பரிமாற பயன்படுத்தப்படும் பாத்திரம்தான்.

அதனை பெற்ற வாடிக்கையாளர், அதை பாத்திரமாக பயன்படுத்தாமல், அழகான பூ ஜாடியாக மாற்றி அமைத்துள்ளார். இதேபோல் எங்களின் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்த்த பொருட்கள் என்றால் டைப் ரைட்டர் மிஷின், புரௌனி கேமரா, தேக்கு அலமாரிகள் மற்றும் வெண்கல வெற்றிலை பெட்டி’’ என்ற சகோதரிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்னும் சில அரிய தேக்கு மற்றும் வெண்கல பொருட்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட இருப்பதாக குறிப்பிட்டனர்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post பழங்கால பொக்கிஷங்கள்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED குழந்தைகளின் சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் ‘மான்டசரி’ கல்வி!