×

போகிப் பண்டிகையை முன்னிட்டு, மாணவியர்கள் பங்கேற்ற புகையில்லா போகி விழிப்புணர்வுப் பேரணி: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் போகிப் பண்டிகையை முன்னிட்டு, புகையில்லா போகி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் தியாகராய நகர் சாரதா வித்யாலயா மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் பங்கேற்ற புகையில்லா போகி விழிப்புணர்வுப் பேரணியினை மேயர் ஆர். பிரியா இன்று (09.01.2024) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் தெரிவித்ததாவது :
பள்ளிப் பருவம் என்பதே வாழ்க்கையின் மிகவும் முக்கியமான பருவம். இதில் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடுவதோடு மட்டுமில்லாமல், படிப்பில் அதிக கவனம் செலுத்தி சிறப்பாக படிக்க வேண்டும். பெண்களுக்கு படிப்பு மிகவும் முக்கியமானதாகும். மாணவர்கள் தங்களுக்கென்று ஒரு இலக்கை வைத்து அதனைத் தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் முன்னேறிட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். நீங்கள் அனைவரும் தொடர்ந்து படிப்பதற்கு அரசு அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருக்கும்.

போகிப் பண்டிகை என்பது நமது வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிக்க வேண்டும் என்பதையும் தாண்டி, நமது மனதில் உள்ள வன்மங்கள், கோபங்கள் மற்றும் பகை போன்ற தீய எண்ணங்களை அகற்றும் வகையில் இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் ரப்பர், டயர், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பழைய பொருட்களை எரிப்பதனைத் தவிர்த்து, தங்களது இல்லத்திற்கு குப்பை சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும். பெற்றோர்கள் மற்றும் அருகிலுள்ளவர்களுக்கு இதுகுறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும்.

மாணவர்களாகிய நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் இதனைக் கடைப்பிடிக்கும் பொழுது உங்களைப் பார்க்கும் அனைவரும் இதனைப் பின்பற்றுவார்கள். மாற்றம் என்ற ஒன்று நம்மிடம் இருந்து தான் தொடங்க வேண்டும். அனைவருக்கும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவது நமது கடமையாகும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி, கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) டாக்டர் கோ. சாந்தகுமாரி, மத்திய வட்டார துணை ஆணையாளர் கே. ஜெ. பிரவீன் குமார், இ.ஆ.ப., நியமனக் குழு உறுப்பினர் ராஜா அன்பழகன், மாமன்ற உறுப்பினர் ஏழுமலை, சுகாதார கல்வி அலுவலர் முனைவர் டி.ஜி.சீனிவாசன் மற்றும் எக்ஸ்நோரா நிர்வாகி ஶ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post போகிப் பண்டிகையை முன்னிட்டு, மாணவியர்கள் பங்கேற்ற புகையில்லா போகி விழிப்புணர்வுப் பேரணி: மேயர் பிரியா தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Bhogi Festival ,Smoke Free Bhogi Awareness Rally ,Mayor ,Priya ,Chennai ,Metropolitan Chennai Corporation ,smoke-free pogi ,Thiagaraya Nagar Saratha Vidyalaya Model Girls' High School ,Bogi festival ,smoke ,free ,Vaitar ,
× RELATED அரசு பஸ் டிரைவருடன் தகராறு...