×

நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக மழை: தாமிரபரணியில் மீண்டும் வெள்ளம்

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 17, 18 ஆகிய தினங்களில் பெய்த கனமழை காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இதைதொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சத்து 31 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டன.

தற்போது வெள்ள பாதிப்பில் இருந்து நெல்லை, தூத்துக்குடி பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். கடந்த 2 தினங்களாக மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் மழை எச்சரிக்கை காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்றும் பல்வேறு இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் தூத்துக்குடி, வைகுண்டம், செய்துங்கநல்லூர், ஏரல், ஆறுமுகநேரி, நாசரேத், குளத்தூர், கயத்தாறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரைபுரள்வதால் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

கடந்த முறை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது கரையோரங்களில் உடைப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்த நிலையில், தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வை. அணையில் மணல் வாரி மதகுகளை நீர்வளத் துறையினர் திறந்துள்ளனர்.முக்காணி தாமிரபரணி ஆற்றங்கரைகளில் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் ஆற்றில் இறங்கக் கூடாது என்ற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. ஏரல் தாம்போதி ஆற்றுப்பாலம் மூழ்கும் நிலையில் தண்ணீர் செல்கிறது.

The post நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக மழை: தாமிரபரணியில் மீண்டும் வெள்ளம் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Thoothukudi ,Tamiraparani ,Papanasam ,Manimutthar ,Servalaru ,Dinakaran ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...