×

டி20யில் பல சாதனைகள் படைத்த சாகலுக்கு இடம் மறுப்பு: ரசிகர்கள் கொதிப்பு

மும்பை :ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வரும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு இந்தியா விளையாடப் போகும் கடைசி சர்வதேச டி20 தொடர் இதுவாகும். இதனால் இந்த அணியில் இடம்பெறும் வீரர்கள் பெரும்பாலும் டி20 உலக கோப்பையில் விளையாடுவார்கள். இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்த இந்திய கிரிக்கெட் வீரர் சாகல் டி20 போட்டிகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் யார் சிறந்து விளங்குகிறார்களோ அவர்களுக்கு டி20 கிரிக்கெட்டில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

ஏற்கனவே ரிங்கு சிங் போன்ற வீரர்கள் எல்லாம் தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி தான் இந்திய டி20 அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள் ஜிதேஷ் சர்மா போன்ற வீரர்களுக்கும் ஐபிஎல் போட்டி தான் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அப்படி இருக்க ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையை சாகல் பெற்று இருக்கிறார். இதுவரை 145 போட்டிகளில் விளையாடி 187 விக்கெட்டுகளை எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார். பிராவோ 183 விக்கெட் உடன் 2வது இடத்தில் இருக்கிறார்.

இதேபோன்று சர்வதேச டி20 வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையும் சாகலுக்கே சேரும். சாஹல் 80 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்களை கைப்பற்றி இருக்கிறார். இப்படி சாஹல் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கும் நிலையில் அவருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் சாகல் நீக்கப்பட்டு இருந்தார். தற்போது இந்திய அணி குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் பக்கம் சாய்ந்து இருக்கிறது. இதனால் இனி சாகல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் இந்திய தேர்வு குழுவின் இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு அலையை ஏற்படுத்தி உள்ளது.

The post டி20யில் பல சாதனைகள் படைத்த சாகலுக்கு இடம் மறுப்பு: ரசிகர்கள் கொதிப்பு appeared first on Dinakaran.

Tags : Sagal ,T20 ,MUMBAI ,INDIAN ,3 T20 ,AFGHAN ,India ,T20 World Cup ,Sakal ,Dinakaran ,
× RELATED அஷுதோசின் அதிரடி ஆட்டம் வீண் பஞ்சாப்பை போராடி வென்றது மும்பை