×

கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 1000 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம்

*இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

வில்லியனூர் : புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எப்போது மழை பெய்தாலும் முதலில் பாதிப்பு அடைவது விவசாயிகள் தான். அதன்படி இந்த முறையும் தொடர் மழை பெய்து வருவதால் ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பருவ நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதன் ஒருபகுதியாக வில்லியனூர், கரிக்காலாம்பாக்கம், மேல்சாத்தமங்கலம், உறுவையாறு, ஏம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் முழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்டு வருகிறார்.

திருக்கனூர்: புதுச்சேரியில் நேற்று முன்தினம் முதல் தற்போது வரை இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த விவசாய நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்துள்ளது. திருக்கனூர் அருகே உள்ள கைக்கிலப்பட்டு அருள் என்பவருக்கு சொந்தமான 100 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. இதே போல் திருக்கனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக வேளாண்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருபுவனை: புதுச்சேரியில் பெய்து வரும் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் தரையில் சாய்ந்து மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பொன்னி, பி.பி.டி போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் மார்கழி கடைசியிலும் தை மாதம் முதலிலும் அதாவது பொங்கலுக்கு அறுவடை செய்யும் காலகட்டமாகும். தற்போது மழை பெய்ததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த மழை பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. மழை நின்ற போதும் நெல் அறுவடை செய்து நெல் மணிகளை வெளியில் கொண்டு வருவதற்கு கிட்டத்தட்ட 15 முதல் ஒரு மாத காலம் வரை ஆகும். எனவே புதுச்சேரி அரசு வேளாண்துறை சார்பில் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு அதற்குரிய இழப்பீடு தொகையை உடனடியாக வழங்கி விவசாயிகள் உழவர் திருநாளை நிம்மதியோடு கொண்டாடுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என புதுச்சேரி விவசாயிகள் சங்க செயலாளர் ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.

The post கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 1000 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம் appeared first on Dinakaran.

Tags : Willianur ,Dinakaran ,
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...