×

புதுவையில் ஒரே நாளில் 15 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது வீடுகளில் கழிவுநீர் புகுந்ததால் மக்கள் அவதி

*மின்சாதன பொருட்கள் நாசம்

புதுச்சேரி : புதுச்சேரியில் இடைவிடாது பெய்த மழையின் காரணமாக பாவாணர் நகர், பூமியான்பேட்டை, ஜவகர் நகர், ரெயின்போநகர் பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது. அருகில் உள்ள வாய்க்காலில் இருந்து கழிவு நீர் வெளியேறி, மழை நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

புதுச்சேரியில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று மதியம் வரை தொடர்ந்து கனமழை கொட்டியது. ஒரே நாளில் 15 செ.மீ மழை பெய்ததால் புதுச்சேரியின் தாழ்வான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்தது. புதுச்சேரி இந்திராகாந்தி சதுக்கம் பகுதியில் மழை நீர் தேங்காத வகையில் தனியாக வாய்க்கால் அமைக்கப்பட்டு, வேல்ராம்பட்டு, உழந்தை ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டது. அதே நேரத்தில் பாவாணர் நகர் வாய்க்கால் பணிகள் இன்னும் முழுமையடையாததால், சாலைகளில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கழிவு நீர் இந்திராகாந்தி சதுக்கத்தை சூழ்ந்ததால் கழிவு நீரில் ஊர்ந்தபடியே வாகனங்கள் சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழையால் பாவாணர் நகர், நடேசன் நகரில்மழை நீருடன் கழிவுநீர் கலந்து 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். வீட்டில் இருந்த பிரிட்ஜ், கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் மழையில் நனைந்து நாசமானது. இதனால் பொதுமக்கள் பொருட்களை துணியில் கட்டி கட்டில், மேஜை உள்ளிட்ட உயரமான இடத்தில் பாதுகாப்பாக வைத்தனர். மழை நீருடன் கழிவு நீரும் கலந்ததால், அப்பகுதியில் காலரா, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பரிதவித்தனர்.

அப்பகுதியில் இருந்த சைடு வாய்க்கால் முழுவதும் மழை நீரால் நிரம்பியிருந்தது. இதனால் சாலை எங்கே இருக்கிறது என தெரியாமல் சிலர் கீழே விழுந்தனர். அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு காப்பாற்றினர். இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, இப்பகுதியில் எப்போதும் மழை நீர் தேங்கும், ஆனால் இந்த முறை மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்துவிட்டது. பாவாணர்நகர் வடிகால் வாய்க்கால் பணிகளை முன்கூட்டியே முடித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. வாய்க்கால் அமைக்கப்பட்டால், மழை நீர் தேங்காது என்று சொன்னார்கள். ஆனால் இப்போது கழிவு நீர் புகுந்துவிட்டதால் தொற்றுநோய் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை அரசு எப்படி சரி செய்யப்போகிறது என தெரியவில்லை. நகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. ஆண்டுதோறும் தொடரும் இந்த அவல நிலையை தடுக்க அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வாளியால் இறைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்தால்தான் மற்ற வேலைகளை பார்க்க முடியும் என்றனர்.

அதேபோல் ரெயின்போ நகர், கிருஷ்ணாநகர் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் வடியாததால் அப்பகுதி பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் நகராட்சி ஊழியர்கள் அகற்றி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரதான வாய்க்காலில் விட்டனர். 45 அடி சாலையில் உள்ள காமராஜர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே உள்ள தெருக்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

புதுச்சேரி நகர மற்றும் கிராமப்பகுதியில் சுமார் 500 குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. கடற்கரை சாலையில் உள்ள லே – கபே அருகே வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பால், மழைநீர் வடியாமல் தேங்கி நின்றது. இதனால் கடற்கரை சாலை வழியாக சென்றவர்கள் அவதிக்குள்ளாகினர்.

The post புதுவையில் ஒரே நாளில் 15 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது வீடுகளில் கழிவுநீர் புகுந்ததால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Puducherry ,Bhavanar Nagar ,Bhumiyanpet ,Jawahar Nagar ,Rainbow Nagar ,Dinakaran ,
× RELATED வெயில் படுத்தும் பாடு… ஏடிஎம் ஏசி அறையில் தூங்கிய போதை ஆசாமி