×
Saravana Stores

காவல் துறை வாகனங்களை எஸ்பி சிலம்பரசன் ஆய்வு

நெல்லை : நெல்லை மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் நடந்த போலீஸ் அதிகாரிகளின் மாதாந்திர ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற எஸ்.பி. சிலம்பரசன், காவல் துறை வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த டிஎஸ்பிக்கள், ஏடிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் ஆகியோர் பங்கேற்ற மாதாந்திர ஆய்வுக்கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு தலைமை வகித்த எஸ்.பி. சிலம்பரசன் முக்கிய ஆலோசனைகள் வழங்கிப் பேசினார். மேலும் மாட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவையில் உள்ள வழக்குகள், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது மேற்கொள்ளப்படும் கடும் நடவடிக்கைகள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அத்துடன் நீதிமன்ற அலுவல்கள் உள்ளிட்ட மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக நெல்லை மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மாவட்ட காவல்துறையின் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் காவலர்கள் அவசர காலங்களில் பணிக்கு செல்லும் வாகனங்கள், உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள், நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா என எஸ்பி சிலம்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வாகனஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கி, வாகனங்களின் நிறை குறைகளை கேட்டு தெரிந்துக்கொண்டார்.

நெல்லை மாவட்டத்தில் கொலை, திருட்டு மற்றும் போக்சோ வழக்குகளில் உள்ள சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த காவல் அதிகாரிகள், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட போலீசார் மற்றும் அரசு வக்கீல்கள் உட்பட மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 48 பேருக்கு எஸ்பி சிலம்பரசன் நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.கூட்டத்தில் ஏடிஎஸ்பி (தலைமையகம்) பாலச்சந்திரன், டிஎஸ்பிக்கள், அரசு வக்கீல்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்ஐக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post காவல் துறை வாகனங்களை எஸ்பி சிலம்பரசன் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : SP ,Silambarasan ,Nellai ,S.B. ,Nellai district ,Dinakaran ,
× RELATED காவல் நிலையங்களில் எஸ்பி திடீர் ஆய்வு