×

ஜோலார்பேட்டை அருகே ஏரியில் சடலமாக மீட்பு ஆந்திர வாலிபரின் ₹40 ஆயிரம் பணம், புல்லட் வாகனம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

*அடக்கம் செய்த இடத்தில் கண்ணீர் அஞ்சலி

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட ஆந்திர வாலிபரிடம் இருந்த ரூ.40 ஆயிரம் பணம் மற்றும் புல்லட் வாகனத்தை போலீசார் அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி மகன் கோவிந்தன்(23). இவரது பெற்றோர்கள் இறந்து விட்டதால் 15 வயதில் வீட்டை விட்டு விட்டு வெளியேறி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள கேண்டின் ஒன்றில் டீ வியாபாரம் செய்து வந்தார்.

மேலும் இவர் ஜோலார்பேட்டை புது ஓட்டல் தெரு பகுதியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். உடன் பிறந்தவர்களும் யாரும் இல்லாததால் உறவினர்கள் வீட்டிற்கும் செல்லாமல் தனியாக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் புத்தாண்டு தினத்தன்று இரவு தனது புல்லட் வாகனத்தை எடுத்துக் கொண்டு ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி ஏரிக்கரை அருகே தனது வாகனத்தை நிறுத்திவிட்டு மது அருந்தியுள்ளார்.

அப்போது கோவிந்தன் ஏரியில் தவறி விழுந்துள்ளார். மேலும் ஏரிக்கரை அருகில் பள்ளத்தில் புல்லட் வாகனம் இருந்ததை கண்ட அப்பகுதி பொது மக்கள் சந்தேகத்தின் பேரில் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு யாரும் இல்லாததால் புல்லட் வாகனத்தை மட்டும் மீட்டனர்.

அன்று மாலை 6 மணியளவில் புல்லட் வாகனம் நிறுத்தப்பட்ட இடத்தின் அருகே ஏரியில் வாலிபர் சடலம் மிதந்ததை அறிந்த சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மஸ்தான் உள்ளிட்டோர் வாலிபரின் உடலை மீட்டு அவரது பாக்கெட்டில் வைத்திருந்த அடையாள அட்டை மற்றும் 40 ஆயிரம் ரொக்க பணத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு வாலிபர் குறித்து அங்குள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் உறவினர்கள் குறித்து எந்தவித தகவலும் கிடைக்காததால் ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சுடுகாட்டில் வாலிபரின் சடலத்தை அடக்கம் செய்தனர். பின்னர் விசாகப்பட்டினம் பகுதியில் ஆந்திர மாநில போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் தகவல் அறிந்த கோவிந்தன் உறவினர்கள் நேற்று ஜோலார்பேட்டை காவல் நிலையம் வந்தடைந்தனர்.

மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இறந்தவரின் சடலத்தை பார்க்க முடியாமல் அவரது குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதனை அடுத்து சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வாலிபரிடமிருந்து மீட்கப்பட்ட ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தையும் அவர் பயன்படுத்திய புல்லட் வாகனத்தையும் அவரது உறவினர்களிடம் நேற்று முன்தினம் இரவு ஒப்படைத்தனர்.

பெற்றோர்கள் உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லாததால் 15 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய வாலிபர் உறவினர்களிடம் தொடர்பு இல்லாமல் வசித்து வந்த நிலையில் அவரது உறவினர்கள் வாலிபரின் உடலை பார்க்க முடியாமல் கதறி அழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தி அவர் பயன்படுத்திய பொருட்களை கொண்டு சென்ற சம்பவம் அனைவரிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தியது.

The post ஜோலார்பேட்டை அருகே ஏரியில் சடலமாக மீட்பு ஆந்திர வாலிபரின் ₹40 ஆயிரம் பணம், புல்லட் வாகனம் உறவினர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Jollarpet ,Jolarpet ,Elagiri lake ,Dinakaran ,
× RELATED சிக்னல் கோளாறால் சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி