×

வேலூரில் மாமூல் தராததால் ஆத்திரம் பர்மா பஜார் கடை மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற ரவுடி

*பழைய பஸ் நிலையத்தில் பரபரப்பு

வேலூர் : மாமூல் தராததால் ஆத்திரமடைந்த பர்மா பஜார் கடை மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பர்மாவில் இருந்து 1960 முதல் 1980ம் ஆண்டுகள் வரை தாயகத்துக்கு விரட்டியடிக்கப்பட்ட பர்மா தமிழர்களுக்கு இங்கு குடியுரிமையுடன், பர்மா பஜார் என்ற பெயரில் கடைகள் வைத்து எலக்ட்ரானிக் பொருட்கள், ஜவுளிகள், எலக்ட்ரானிக் பொம்மைகள் என அனைத்து பொருட்கள் விற்று வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டன. வேலூரில், தலைமை தபால் நிலையம் ஒட்டியுள்ள நிக்கல்சன் கால்வாயின் மீது கான்கிரீட் தளம் போடப்பட்டு அதன் மீது சிறிய பெட்டிக்கடைகள் போல 91 கடைகளுடன் பர்மா பஜார் கடந்த 1981ம் ஆண்டு உருவானது. இதனால் நிக்கல்சன் கால்வாய் தூர்வாருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இச்சிக்கலுக்கு தீர்வு காண கடந்த 2008ம் ஆண்டு வேலூர் மாநகராட்சி நிர்வாகம், அங்கிருந்த பர்மா பஜார் கடைகளை வேலூர் பழைய பஸ் நிலையத்துக்கு மாற்றியது. இந்நிலையில் வேலூர் வடக்கு காவல் நிலையம் அருகிலும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பழைய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள பர்மா பஜார் வியாபாரிகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக குடிமகன்களாலும், ரவுடிகளாலும் பெரும் தொல்லை ஏற்படுவதாக புகார் எழுந்து வருகிறது.

இதனை கண்டு கொள்ளாததால் நேற்று மாமூல் கேட்டு ரவுடி ஒருவர் பெட்ரோல் ஊற்றி கடை ஒன்றை எரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் பழைய பஸ் நிலையம் மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தை ஒட்டிய பர்மா பஜார் கடை வரிசையில் சரவணன் என்பவரது கடை உள்ளது. இங்கு நேற்று மாலை வசந்தபுரம் இந்திரா நகரை சேர்ந்த பார்த்தீபன்(40) என்பவர் மதுபோதையுடன் வந்து பொம்மை ஒன்றை கேட்டுள்ளார். அதற்கு சரவணன் அதன் விலையான ₹130ஐ கொடுத்துவிட்டு பொம்மையை வாங்கிச் செல்லும்படி கூறியுள்ளார். பணம் கொடுக்க முடியாது. நீதான் எனக்கு மாமூல் தர வேண்டும். ஆகவே பொம்மையை தந்தாக வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

அதற்கு சரவணன் மறுக்கவே, ஆபாசமாக பேசியபடி அங்கிருந்து சென்றவர் மீண்டும் இரவு 7 மணியளவில் வந்து சரவணனிடம் தகராறில் ஈடுபட்டதுடன், பாட்டிலில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை சரவணன் மீதும், கடையின் மீதும், கடையில் பொருட்கள் வாங்க நின்றிருந்தவர்கள் மீதும் ஊற்றி விட்டு தீ வைக்க முயன்றாராம். உடனடியாக சுதாரித்த சரவணனும், பர்மா பஜார் வியாபாரிகளும், பொதுமக்களும் சேர்ந்து தடுத்து பார்த்தீபனை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் பிடியில் சிக்காமல் பார்த்தீபன் தப்பி ஓடி விட்டார்.

பெட்ரோல் ஊற்றியதும் உஷாரடைந்ததால் அங்கு பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இல்லையெனில் மரத்தால் ஆன பெட்டி கடைகளால் ஆன பர்மா பஜார் முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் தீப்பற்றி எரிந்ததுடன், அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்துக்கும் பரவி வாகனங்களும் தீயில் சிக்கி பெரும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் பர்மா பஜார் வியாபாரிகள் உஷாராக பார்த்தீபனை மடக்கியதால் பெரும் விபரீதம் அங்கு தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பார்த்தீபனை தேடி வருகின்றனர். அவர் மீது ஏற்கனவே தெற்கு காவல் நிலையத்தில் பல்வேறு அடிதடி வழக்குகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

The post வேலூரில் மாமூல் தராததால் ஆத்திரம் பர்மா பஜார் கடை மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற ரவுடி appeared first on Dinakaran.

Tags : Vellore ,Parma ,Bazaar ,Burma ,Burma Bazaar ,
× RELATED ₹13.12 லட்சம் மோசடி செய்த ஊழியர்...