×

கனமழையால் கதிர்கள் தண்ணீரில் மூழ்கின மானூர் சுற்றுவட்டாரத்தில் 2 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் சேதம்

*இழப்பீடு கேட்டு கண்ணீரோடு காத்திருக்கும் விவசாயிகள்

நெல்லை : நெல்லை மாவட்டம், மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கொட்டித்தீர்த்த கனமழையால் சேதம் அடைந்தன. நெற்கதிர்கள் அனைத்தும் நீரில் சாய்ந்துபோனதால் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள் உரிய இழப்பீடு கோரி போராடி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்ததால், மானாவாரி பகுதிகளில் கூட விவசாயிகள் அதிகளவு நெல் பயிரிட்டனர்.

குளங்கள், கிணறுகளில் நீர்இருப்பு அதிகமாக இருந்ததால், நடப்பு பிசான சாகுபடி கண்டிப்பாக கரைசேரும் என்ற கனவில் இருந்தனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையும், அதை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும், விவசாயிகளின் நம்பிக்கையில் சேற்றை வாரி இறைத்தன. இந்நிலையில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு இடங்களில் வயல்வெளிகளில் இருந்து நீரை வெளியேற்ற வழியின்றி விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் மானூர் அருகே கானார்பட்டி, குப்பனாபுரம் பகுதிகளில் விவசாயிகள் இவ்வாண்டு அதிகளவில் நெல் பயிரிட்டனர். குறைந்த நாள் சாகுபடியில் அதிக விளைச்சல் என்ற கணக்கில் ஆர்என்ஆர், அம்மன் ரக நெல் விதைகளை தேர்வு செய்து ஏக்கர்கணக்கில் விதைத்திருந்தனர். கானார்பட்டி, குப்பனாபுரம் பகுதிகளில் கிணறுகள் கடந்த மாதம் பெய்த மழையில் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி மானூர் வட்டாரத்தில் பெய்த கனமழையால் நெற்பயிர்களுக்குள் அதிகளவு தண்ணீர் புகுந்துள்ளது. பொதி வந்த நிலையில் காணப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து அழுகி காணப்படுகின்றன. கனமழை காரணமாக வயல்களுக்குள் ஊற்று அடிக்க தொடங்கியது. இதனால் விவசாயிகளால் வயல்களில் இருந்து தண்ணீரை வடிய வைக்க முடியவில்லை. மேலும் கிணறுகளும் நிரம்பி வழிவதால், அதற்குள் வயல்நீரை வடிய வைக்க முடியாமல் திண்டாடினர்.

இதனால் கானார்பட்டி பகுதியில் மட்டுமே 2 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் அப்படியை தலைசாய்ந்து அழுகியுள்ளன. இன்னமும் ஒரு மாத காலத்தில் அறுவடை செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

வைக்கோலுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை

இதுகுறித்து கானார்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் யாக்கோபு, ஐசக்ரூபன் ஆகியோர் கூறுகையில் ‘‘கடந்த மாதம் கனமழை வெள்ளத்தில் கூட பயிர்களை எப்படியோ காப்பாற்றி கொண்டோம், ஆனால் கடந்த 5ம் தேதி பெய்த மழையில் நெல் பயிர்கள் அனைத்தும் அப்படி பாய் விரித்து படுத்தாற்போல் தலைசாய்ந்துவிட்டன. தண்ணீரை வெளியேற்ற வழியில்லாத நிலையில், கிணறுகளும், வாய்க்கால்களும் நீர்நிறைந்து காணப்படுகின்றன.

வயலுக்குள் தண்ணீர் ஊற்று அடிக்கிறது. நெல் சாகுபடிக்கு நாங்கள் வாகைக்குளம் கூட்டுறவு சொசைட்டியில் ஒரு லட்சம் வரை கடன் பெற்றுள்ளோம். இப்போது நெற்பயிர்கள் விளைச்சலும் இன்றி, மகசூலும் இன்றி திண்டாடுகிறோம். வயலில் இருந்து அந்த நாற்றுக்களை வைக்கோலுக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

நெல் பயிரிட ஒரு ஏக்கருக்கு நடுவை கூலி ரூ.10 ஆயிரம், உழவு, உரம் என சுமார் 40 ஆயிரம் வரை செலவிட்டோம். ஆனால் மழையால் அனைத்தும் வீணாகிவிட்டது. இவ்வாண்டு வறட்சி இல்லாததால், நாங்கள் நெல் பயிருக்கு இன்சூரன்ஸ் கூட செய்யவில்லை. எனவே வேளாண் அதிகாரிகள் எங்கள் பகுதியில் மழைநீரில் மூழ்கிய விளைநிலங்களை பார்வையிட்டு இழப்பீடு வழங்கிட வேண்டும். இதுகுறித்து நாங்கள் கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளோம்’’ என்றனர்.

The post கனமழையால் கதிர்கள் தண்ணீரில் மூழ்கின மானூர் சுற்றுவட்டாரத்தில் 2 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Manoor ,Nellai ,Manur ,Nellai district ,Dinakaran ,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது