×

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘நலம் நாடி’ என்ற புதிய செயலி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளம் தொடக்கம்

சென்னை: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சீரிய வழிகாட்டுதலில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘நலம் நாடி’ என்ற புதிய செயலி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களது கல்வியினை எவ்வித தடையுமின்றி பெற வேண்டும் என்ற அக்கறையில் தமிழ்நாடு அரசு பல முக்கியமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதன் வாயிலாக பல மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உடல் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதன் வாயிலாக அவர்களுடைய குறைபாடுகள் கண்டறியப்பட்டு அதனைக் களைவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறாக மாணவர்களிடையே ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனைக் கண்டறியவே “நலம் நாடி” எனும் செயலி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பயிற்றுனர்கள் இச்செயலியைப் பயன்படுத்தி குறைபாடுகளை எளிதில் கண்டறிவார்கள். மாணவர்களுக்கு பிறக்கும் போதே ஏற்பட்டுள்ள குறைபாடுகள், வளர்ச்சியில் ஏற்படும் தாமதங்கள், மற்றும் பிற குறைபாடுகள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுகின்றன. பள்ளிகளில் ஆசிரியர்களால், இக்குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டு, பின்னர் சிறப்புப் பயிற்றுநர்களால், இந்தச் செயலியைப் பயன்படுத்தி 21 வகையான குறைபாடுகளுக்கு முழுமையான பரிசோதனை மேற்கொள்ள இயலும்.

இதன் வாயிலாக மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி மற்றும் பிற சலுகைகள் அனைத்தும் உரிய தருணத்தில் கிடைப்பதை உறுதி செய்ய இயலும்.

சிந்தனையில் மாற்றம்!
சமூகத்தில் ஏற்றம்! -என்பதே நம் இலக்கு.

வகுப்பறையில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்தல் மிகவும் அவசியம். இதனை உறுதி செய்ய “நலம் நாடி” என்ற இச்செயலி பேருதவியாக அமைந்திடும்.

கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (KGBV)

கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா எனும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக தர்மபுரி, அரியலூர், கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சிவகங்கை, சேலம், பெரம்பலூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய 15 மாவட்டங்களில் பெண் கல்வியில் பின்தங்கியுள்ள 44 ஒன்றியங்களில் 61 KGBV உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் முறையான பள்ளிகளிலிருந்து இடைநின்ற அல்லது பள்ளியில் சேராத 10 வயது முடிந்த 14 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் சேர்க்கப்பட்டு கல்வி பயின்று வருகிறார்கள்.

மேலும், 14 மாவட்டங்களில் (அரியலூர், தர்மபுரி, கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சிவகங்கை, சேலம், பெரம்பலூர், திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம்) கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில் 44 பெண்கள் விடுதிகள் இயங்கி வருகின்றன. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், இடைநிலைப் பள்ளியில் (IX-XII) பெண் குழந்தையைத் தக்க வைத்துக் கொள்வதாகும்.

இவ்விடுதிகளில் 9 – 12 வகுப்பு மாணவிகள் தங்கி, விடுதி வளாகம் / விடுதிக்கு அருகாமையில் உள்ள அரசு உயல்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவிஷ்ய வித்யாலயா (NSCBAV) உண்டு உறைவிடப் பள்ளி

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தமிழ்நாடு இலவச கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011ன்படி (RTE Rules,2011) பள்ளி வசதி ஏற்படுத்திட இயலாத குடியிருப்புகளில் பள்ளி வசதி அளிக்கும் பொருட்டு, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகள் உள்ள பள்ளி வசதி இல்லாத குடியிருப்புப் பகுதியில் உள்ள குழந்தைகள், நகர்ப்புறக் குழந்தைகள், தெருவோரக் குழந்தைகள், வீடில்லாக் குழந்தைகள் மற்றும் பெரியோர் துணை இல்லாத குழந்தைகளுக்காக தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் (கோயம்புத்தூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், இராமநாதபுரம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, பெரம்பலூர், தர்மபுரி மற்றும் திருப்பூர்) 15 உண்டு உறைவிடப் பள்ளிகளும் 3 மாவட்டங்களில் (கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் விருதுநகர்) 3 விடுதிகளும் தற்போது இயங்கி வருகின்றன.

* கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகள் மற்றும் பெண்கள் விடுதிகள், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவிஷ்ய வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகள் மற்றும் விடுதிகள் ஆகியவற்றில் பயின்று வரும் மொத்தம் 9870 மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை ஒரு மாதத்திற்கு ரூ.200/- வழங்கப்பட்டு வருகிறது.

* இதுநாள் வரையில் ஊக்கத்தொகைக்கான நிதி மாநிலத் திட்ட இயக்ககத்திலிருந்து மாவட்டத்திற்கும், மாவட்டத்திலிருந்து வட்டார வள மையத்திற்கும், வட்டார வளமையத்திலிருந்து பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்டு மாணவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டது.

* காலதாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு தற்போது ஜனவரி-2024 முதல் மாணவ/மாணவிகளின் ஊக்கத் தொகை மாநில திட்ட இயக்ககத்திலிருந்து மாணவரின் வங்கி கணக்கிற்கு (DBT) நேரடியாக செலுத்தப்படும். இவ்வகையில் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது உத்தரவின்பேரில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் 9870 மாணவ மாணவியர்களுக்கான ஊக்கத் தொகை மாணவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்துவதற்கான வசதி தொடங்கி வைக்கப்படுகிறது.

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான குறைதீர் அமைப்பு:
தமிழ்நாட்டில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் தகுதிகாண் பருவம் முடித்தல், உயர் கல்வி பயில அனுமதி கோருதல், தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதிக்க கோருதல் போன்ற கருத்துருக்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தால் சமர்ப்பிக்கப்படும் பணியிடம் நிரப்ப முன் அனுமதி கோருதல், பணி நியமனத்திற்கு ஒப்புதல் கோருதல் போன்ற கருத்துருக்கள் வட்டார / மாவட்ட / முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நிலுவையில் உள்ள நிலையில், தங்கள் கோரிக்கை சார்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகம் அறிந்து கொள்வதற்கும், பல்வேறு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை உயர் அலுவலர்கள் கண்காணித்திடவும், விரைந்து தீர்வு காணும் வகையில் emis.tnschools.gov.in இணையதளத்தில் தங்களது கோரிக்கையினை இணைய வழியே சமர்ப்பித்திட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குறைகளை தீர்வு காண ஏற்படுத்தப்பட்டுள்ள வசதியினைப் போன்று அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகங்களின் குறைகளை களைந்திட ஏதுவாக புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரிகள் தங்களது பள்ளிக்குரிய பயனர் குறியீடு (user ID) மற்றும் கடவுச் சொல் (Password) பயன்படுத்தி EMIS இணையதளத்தில் உள்நுழைந்து தங்களது குறிப்பிட்ட கோரிக்கையினை தெரிவு செய்து, கருத்துரு சமர்ப்பிக்கப்பட்ட அலுவலகம், நாள் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்கும் நிலையில், சார்ந்த அலுவலரால் தொடர்புடைய கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு விரைந்து ஆணைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், அதன் விவரங்கள் இணைய வழியே மீளவும் பள்ளி நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்படும்.

இதன் மூலம் அரசு நிதிஉதவி பெறும் 8337 பள்ளிகளின்  கோரிக்கைகள் / குறைதீர் மனுக்களின் மீது இணை வழி தொடர் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த குறைதீர் அமைப்பு இன்று முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.

இத்திட்டங்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி, இன்று 09.01.2024 தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டன. இதன் மூலம் பள்ளிக் கல்வித்துறை, பல நவீன முன்னெடுப்புகளை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘நலம் நாடி’ என்ற புதிய செயலி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளம் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Department of School Education ,Chennai ,Chief Minister ,M.K. ,Stalin ,Tamil Nadu Government School Education Department ,School Education Department ,
× RELATED தமிழ்நாட்டில் அனைத்து அரசு...