×

பாளை தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டைகளும் சேதம் மழை வெள்ளத்தில் நனைந்த இலவச வேட்டி சேலைகள்

*சாயமும் கரைந்து போனதால் விநியோகம் செய்யமுடியாத நிலை

நெல்லை : பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த இலவச வேட்டி சேலைகள் மழை வெள்ளத்தில் நனைந்து போனதால் தற்போது மூடைமூடையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் சாயமும் கரைந்துபோனதால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரேஷன் கடைகளுக்கு இலவச வேட்டி சேலைகளை அனுப்புவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே வாக்காளர் அடையாள அட்டைகளும் மழை, வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.

நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பாய்ந்தது. கொக்கிரகுளத்தில் கரையோரத்தில் காணப்படும் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்குள்ளும் வெள்ளம் புகுந்தது. இதில் அங்குள்ள அலுவலகங்களில் தரைத்தளத்தில் உள்ள ஆவணங்கள், அலுவலக பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பாளை தாலுகா அலுவலகம் உள்ள நிலையில், அங்கும் வெள்ளநீர் புகுந்தது.

இதில் 30க்கும் மேற்பட்ட இலவச வேட்டி சேலை பண்டல்களை வெள்ளநீர் நனைத்தது. இவற்றை தற்போது அப்பகுதியில் மொத்தமாக அடுக்கி வைத்துள்ளனர். வேட்டிகள் மற்றும் சேலைகளில் சாயமும் கரைந்துபோனதால், அவற்றை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன் இதனால் பாளை வட்ட வழங்கல் அலுவலகத்தில் இருந்து ரேஷன் கடைகளுக்கு இலவச வேட்டி சேலைகளை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பொங்கலுக்கு முன்னர் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட வேண்டும் என்பதால், பல்வேறு கடையில் இருந்தும் வேட்டி, சேலைகளை விரைந்து வழங்கிட கேட்டு நச்சரித்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி பாளை தாலுகா அலுவலகத்திற்குள் உள்ள வாக்காளர் அடையாள அட்டைகளும் தண்ணீரில் பலத்த சேதம் அடைந்துள்ளன. அவற்றை குவியலாக அள்ளி வைத்துள்ளனர். பலர் புதிய வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், அவற்றை அலுவலகத்திற்குள் வைத்திருந்தனர். அவை அனைத்தும் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றன. பாளை தாலுகா அலுவலக வளாகத்தில் வாக்கு பெட்டிகளும் அதிகளவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட தொகுதிகளுக்கான வாக்காளர் ஆவணங்களும் மழை வெள்ளத்தில் சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தில் சேதம் அடைந்த அனைத்து பொருட்களையும் தற்போது காய வைத்து வரும் நிலையில், தகவல்களை மீட்டெடுக்க முடியுமா என தாலுகா அலுவலக ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.

The post பாளை தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டைகளும் சேதம் மழை வெள்ளத்தில் நனைந்த இலவச வேட்டி சேலைகள் appeared first on Dinakaran.

Tags : Palai taluk ,Palayamgottai taluk ,Dinakaran ,
× RELATED கோபத்தைக் குறைக்க உதவும் உலர் திராட்சை!