×

பிஏசிஎல் நிதி நிறுவனத்தில் ₹2 கோடி பணத்தை கட்டி 500 பேர் பாதிப்பு

*கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க குவிந்தனர்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியை சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் தலைமையிலான குழுவினர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வழியாக புதுடெல்லி உச்சநீதிமன்ற பதிவாளருக்கு மனு அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 1983ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை தலைமையிடமாக கொண்டு தனியார் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. பின்னர் 1996ம் ஆண்டு முதல் டெல்லியை தலைமையிடமாக கொண்டு பிஏசிஎல் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இந்த நிதி நிறுவனத்தின் கீழ் திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம் போன்ற தலைநகரில் அலுவலகம் செயல்பட்டது. அந்த அலுவலகத்தில் முகவர்களாக பணிபுரிந்தவர்கள் மூலம் ஒரு மாதம், மூன்று மாதம் தவணையாக ரூ.1,000 முதல் ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.5 லட்சம் என பல லட்சம் மதிப்பில் பணம் கட்டப்பட்டன. இந்த நிதி நிறுவனம் செயல்படுவற்கு தடை விதிக்க வேண்டி எஸ்இபிஐ அமைப்பு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் 1999ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. பிஏசிஎல் நிதி நிறுவனம் இயங்கலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதனை எதிர்த்து எஸ்இபிஐ அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கடந்த 22.8.2014ம் ஆண்டு பிஏசிஎல் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து முதலீடு பெறுவதற்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து கடந்த 2.2.2016ம் ஆண்டு உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி லோதா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு, இந்நிறுவனத்தின் சொத்துகளை கண்டறிந்து அந்த சொத்துகளை விற்று பிஏசிஎல் நிறுவனத்தில் பங்குதாரர்களாக செயல்பட்ட 640 கம்பெனிகளில் உள்ள முதலீட்டு பணத்தை மீட்டெடுத்து முதலீட்டு திட்டத்தால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு 6 மாதத்தில் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை 7 ஆண்டுகள் ஆகியும் பணத்தை கட்டி பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் லோதா கமிட்டி காலம் தாழ்த்தி வருகிறது. ஏழை முதலீட்டாளர்களாகிய எங்கள் தரப்பில் நியாயத்தை நீதிமன்றத்தில் எடுத்து சொல்வதற்கும், நீதிமன்றத்தில் எந்த நிலையில் உள்ளது என்று தெரிந்து கொள்வதற்கும் லோதா கமிட்டியினர் பிஏசிஎல் சொத்துக்கள் விற்பனை தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் எங்களால் வழக்கறிஞர்கள் நியமனம் செய்ய முடியவில்லை.

எனவே எங்களது பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எங்களுக்காக சட்ட உதவி மையங்கள் மூலம் வழக்கறிஞரை நியமித்து விரைந்து வழக்கை முடித்து ஏழை முதலீட்டாளர்களாகிய எங்களுடைய முதலீட்டு பணம் வட்டியுடன் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களிடம் மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

The post பிஏசிஎல் நிதி நிறுவனத்தில் ₹2 கோடி பணத்தை கட்டி 500 பேர் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : PACL Finance ,Kallakurichi Collectorate Kallakurichi ,Maheshwari ,Kallakurichi ,Supreme Court of New Delhi ,
× RELATED செங்கல்பட்டு அருகே தீவிபத்தில் குடிசை வீடு சேதம்