×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 19 செ.மீ. மழை பதிவானது!

விழுப்புரம்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 19 செ.மீ. மழை பெய்துள்ளது. ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டம் குளித்தலை, அய்யர்மலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், தண்ணீர் பள்ளி, மருதூர், மேட்டு மருதூர், அச்சலூர், நங்கவரம் உள்ளிட்ட ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் 13 செ.மீ., மதுராந்தகத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் திண்டிவனத்தில் 9 செ.மீ., செஞ்சியில் 7 செ.மீ., வானூர், செம்மேடு, திருக்கழுக்குன்றம், வேளாங்கண்ணி, மாமல்லபுரத்தில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் கூறியிருந்த நிலையில் தென்மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மதுராந்தகம் ஏரிக்கு இன்று ஒரே நாளில் 1,000 கனஅடி நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் ஏரியிலிருந்து 1,100 கனஅடி நீரை பொதுப்பணித்துறையினர் வெளியேற்றி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்ட மக்கள் பல ஆண்டுகளாக மதுராந்தகம் ஏரியை தூர்வார வேண்டும் என கோரிக்கை வைத்து வந்த நிலையில் ரூ.120 கோடி ஒதுக்கி தூர்வாரும் பணியை தமிழ்நாடு அரசு மேற்கொண்டது.

கரை மேம்படுத்துதல், மதகுகள் புதுப்பித்தல், 10 வழி கண்கள் கொண்ட ஷட்டர் அமைக்கும் பணி என பல பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தூர்வாரும் பணி வரும் ஜூன் மாதம் வரை டெண்டர் விடப்பட்டிருக்கும் நிலையில் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து நேற்று 500 கனஅடியாக இருந்த நிலையில் இன்று எரிக்கான நீர்வரத்து 1,900 கனஅடியாக உள்ளது. மேலும் ஏரியிலிருந்து 1,100 கனஅடி நீரை பொதுப்பணித்துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 19 செ.மீ. மழை பதிவானது! appeared first on Dinakaran.

Tags : Villupuram district ,Tamil Nadu ,Villupuram ,Rameswaram ,Thangachimadam ,Pampan ,Karur district ,Kulithalai ,Aiyarmalai ,
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...