×

பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகம் முற்றுகை

ராமநாதபுரம், ஜன.9: அபிராமம் பேரூராட்சியுடன் நத்தம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 7 கிராம பெண்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். கமுதி ஊராட்சி ஒன்றியம் நத்தம் ஊராட்சியில் நத்தம், ஆண்டநாயகபுரம், மணிநகரம், முத்தாதிபுரம், கள்ளக்குளம் உள்ளிட்ட 7 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் அனைவரும் விவசாயம், ஆடு, மாடு, கோழி வளர்ப்பின் மூலம் வாழ்வாதாரத்தை நம்பி உள்ளனர்.

இந்நிலையில் நத்தம் ஊராட்சியை அபிராமம் பேரூராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கலெக்டரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். ஆண்டநாயகபுரம் கிராமத்தினர் கூறியதாவது,‘‘எங்கள் ஊராட்சியை அபிராமம் பேரூராட்சியில் இணைப்பதால், நூறுநாள் வேலைத்திட்டம் மக்களுக்கு கிடைக்காமல் போகும்.

வானம் பார்த்த பூமியான இங்கு விவசாயமும் மிகக்குறைவாகவே செய்யப்படுகிறது. அதனால் இங்குள்ள மக்கள் நூறுநாள் வேலை திட்டத்தை நம்பியே உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு பறிபோனால் இங்குள்ள மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை ஏற்படும். மேலும் விவசாய நிலங்களும் வீட்டு மனைகளாக மாற்றப்படும். மக்கள் வருமானமின்றி பேரூராட்சிக்கான வரிகளையும் செலுத்த முடியாது. எனவே எங்கள் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும். இதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

The post பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Natham Panchayat ,Abhiramam ,Municipality ,Natham ,Andanayakpuram ,Maninagaram ,Muttathipuram ,Kallakkulam ,Kamudi Panchayat Union ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே...