×

மெட்ரோ ரயில் பணிக்காக மேம்பாலம் உள்பட 2 பாலங்களை இடிக்க முடிவு: முறையான செயல்திட்டம் இல்லாமல் மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்; வாகன ஓட்டிகள் கடும் அவதி

சென்னை, ஜன.9: மெட்ரோ ரயில் பணிக்காக மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதியில் மேம்பாலம் உள்பட 2 பாலங்கள் இடிக்கப்படுவதால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், மயிலாப்பூர் பகுதியில் முறையான செயல்திட்டம் இல்லாமல் குறுகிய சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக மயிலாப்பூரில் உள்ள திருமயிலை ரயில் நிலையம் அருகே உள்ள பக்கிங்காம் கால்வாய் இடையே உள்ள பாலம், அதேபோல் மயிலாப்பூர் மற்றும் ராயப்பேட்டையை இணைக்கும் முக்கிய மேம்பாலமான அஜந்தா மேம்பாலம் என இரண்டு பாலங்கள் இடிக்கப்படுகிறது. இந்த இரண்டு பாலங்கள் வழியாகத்தான் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை செல்கிறது.

இதனால் 30 அடி ஆழத்திற்கு கீழ் இரண்டு மேம்பாலத்தின் தூண்கள் அமைந்துள்ளன. சுரங்கம் தோண்டும் பகுதியில் தூண்கள் வருவதால் மேம்பாலம் பாதிக்கப்படுகிறது. எனவே அஜந்தா மேம்பாலம் உள்பட 2 பாலங்களை இடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை, சென்னை மாநகர போக்குவரத்து போலீசாருடன் 2 பாலங்கள் இடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்தே மெட்ரோ ரயில் சுரங்கப்பணிக்காக 2 இரண்டு பாலங்கள் இடிக்கப்படுகிறது.

ராயப்பேட்டையில் இருந்து மயிலாப்பூருக்கும், அதேபோல் மந்தைவெளியில் இருந்து மயிலாப்பூருக்கும் இந்த பாலங்கள் வழியாகத்தான் வர முடியும். அதை தவிர்த்து மயிலாப்பூருக்கு வர வேண்டும் என்றால் குறுகிய சந்துகள் வழியாகத்தான் வரமுடியும். இதனால் போக்குவரத்து போலீசார் கடந்த 3 மாதங்களுக்கு மேல் மயிலாப்பூர் பகுதியில் செய்யப்பட வேண்டிய போக்குவரத்து மாற்றங்கள் குறித்து நேரில் பலகட்ட ஆய்வுகள் நடத்தினர். ஆனால், தற்போது பெருகியுள்ள வாகனங்கள் எண்ணிக்கை மற்றும் மயிலாப்பூர் வழியாக சென்ட்ரல் மற்றும் தாம்பரம் செல்லும் அனைத்து மாநகர பேருந்துகளும் 2 பாலத்தின் வழியாகத்தான் செல்கிறது. இதனால் போக்குவரத்து போலீசார் பலகட்ட சோதனை ஓட்டம் நடத்தியும் அது தோல்வியிலேயே முடிந்தது.

இருந்தாலும், மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணிக்காக வேறு வழியின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ராயப்பேட்டை அஜந்தா சந்திப்பில் இருந்தும், மயிலாப்பூர் லஸ் சந்திப்பு முதல் திருமயிலை எம்ஆர்டிஎஸ் வரை, அதேபோல் திருவேங்கடம் தெரு சந்திப்பு முதல் சுரேஷ் சூப்பர் மார்க்கெட் வரை முற்றிலும் மாநகர போக்குவரத்து போலீசார் வாகன போக்குவரத்திற்கு தடை விதித்து, மாற்றுப் பாதையில் வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏற்கனவே லஸ் கார்னர் சந்திப்பில் இருந்து சாந்தோம் செல்லும் கச்சேரி சாலையின் இடையே மெட்ரோ ரயில் பணிக்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னே போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மாநகர போக்குவரத்து போலீசார் மெட்ரோ ரயில் பணிக்காக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றத்தால் மயிலாப்பூர் முற்றிலும் பொது போக்குவரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு தீவு போன்று புறக்கணிக்கப்பட்டுள்ளது.

ராயப்பேட்டையில் இருந்து மயிலாப்பூருக்கு வரும் வாகனங்கள் அனைத்தும், அஜந்தா சந்திப்புக்கு முன்பே வி.பி.ராமன் சாலையிலேயே தடுப்புகள் அமைத்து அதிமுக அலுவலகம் வழியாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையை அடையும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராயப்பேட்டையில் இருந்து மயிலாப்பூர் பேருந்து நிறுத்தத்திற்கு எந்த வாகனங்களும் செல்ல அனுமதியில்லை. அதற்கு மாற்றாக லஸ் கார்னர் சந்திப்பில் இருந்து லஸ் சர்ச் சாலை, டி சில்வா சாலை, பக்தவச்சலம் சாலை, வாரன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை வழியாக இடதுபுறம் திரும்பி சி.பி.ராமசாமி சாலை வழியாக மந்தைவெளி பகுதிக்கு வாகன போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

மந்தைவெளியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் ெதருவின் இடதுபுறம் உள்ள ரங்கா சாலை, கிழக்கு அபிராமபுரம் 1வது தெரு வழியாக லஸ் அவென்யூ, லஸ் சர்ச் சாலை வழியாக, பிஎஸ் சிவசாமி சாலை மூலம் ராயப்பேட்டை செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுபோல் மயிலாப்பூர் பகுதியை தவிர்த்து குறுகிய சாலைகளில் நேற்று முன்தினம் முதல் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டதால் ராயப்பேட்டை, மந்தைவெளி மற்றும் ஆழ்வார்பேட்டை பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாரத்தின் முதல் நாளான நேற்று மயிலாப்பூர், மந்தைவெளி, ராயப்பேடையில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மெட்ரோ ரயில் பணிக்காக, பெரிய அளவில் மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் போக்குவரத்து போலீசார் வாகனங்கள் நெரிசலின்றி செல்ல எந்தவித முன்ஏற்பாடுகளும் முறையான திட்டமிடலும் செய்யாமலும் வழக்கம் போல் ஓரிரு போக்குவரத்து போலீசார் மற்றும் மெட்ரோ பணியாளர்களை கொண்டு தான் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மயிலாப்பூர் வரும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நேற்று
திண்டாடினர்.

* அறிவிப்பு பலகைகள் இல்லை; ஆக்கிரமிப்புகள் அகற்றமில்லை
ராயப்பேட்டை அஜந்தா சந்திப்பு முன்பு போக்குவரத்து போலீசார் தடுப்புகள் அமைத்து அந்த பகுதியில் மட்டும் மாற்று வழிக்கான பலகைகள் வைத்திருந்தனர். முன்னெச்சரிக்கையாக போக்குவரத்து விதிகளின்படி 10 மீட்டர் தொலைவிற்கு முன்னால் எந்தவித அறிவிப்பு பலகைகளும் போக்குவரத்து போலீசார் வைக்கவில்லை. போக்குவரத்து சரிசெய்யும் பணியிலும் முன் அனுபவம் இல்லாத பெண் காவலர்களே ஈடுபட்டனர். அவர்களால் சரியான முறையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து வி.எம்.தெரு வழியாக கல்வி வாரு சாலை வழியாக கச்சேரி சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் போக்குவரத்து போலீசார் வி.எம்.ெதரு மற்றும் கல்வி வாரு சாலையில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் எதுவும் அகற்றப்படாமல், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கல்வி வாரு சாலை ஒருவழிப்பதையாக தற்போது உள்ளது. இருந்தாலும், அந்த சாலையில் வித்யா மந்திர் பள்ளி அமைந்துள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் வழக்கமான நேரங்களில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் இருக்கும்.

ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் கல்வி வாரு சாலையோரங்களில் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு திக்குமுக்காடி வருகின்றனர்.மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வழிபட வருகின்றனர். ஆனால் முறையாக திட்டமிடாமல் போக்குவரத்து போலீசாரால் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றத்தால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் சீராக வாகனங்கள் செல்ல ஏதுவாக அதிக எண்ணிக்கையில் போக்குவரத்து போலீசார் பணி அமர்த்த வேண்டும். போக்குவரத்து மாற்றம் குறித்து அறிவிப்பு பலகைகள் அதிகளவில் வைக்க வேண்டும். போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். தற்போது செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் பல மாதங்களுக்கு மேல் நீடிக்கும் என்பதால், போக்குவரத்து போலீசார் இப்பணிகளை முறையாக செய்தால் மட்டுமே மயிலாப்பூர் பகுதியில் ஏற்பட்டுள்ள வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என்று வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மெட்ரோ ரயில் பணிக்காக மேம்பாலம் உள்பட 2 பாலங்களை இடிக்க முடிவு: முறையான செயல்திட்டம் இல்லாமல் மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்; வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Mylapore ,Chennai ,Mylapore, Rayapetta ,Dinakaran ,
× RELATED ரூ.1.5 கோடி வழிப்பறி: 9 பேர் கைது