×

தனியார் நிறுவனம் தொடங்கி முறைகேடு பெரியார் பல்கலை. அதிகாரி மனைவியிடம் விசாரணை: மேலும் பலருக்கு சம்மன் அனுப்ப முடிவு

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் விவகாரம் தொடர்பாக அதிகாரியின் மனைவியிடம் போலீசார் பலமணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் பலருக்கு சம்மன் அனுப்பவும் முடிவு செய்துள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற தனியார் நிறுவனம் தொடங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். மேலும், இதில் தொடர்புடைய பதிவாளர் தங்கவேல் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன், பெரியார் பல்கலைக் கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியரான பொறுப்பு பதிவாளர் விஸ்வநாதமூர்த்தி, பதிவாளர் அலுவலகத்தில் பிரிவு அலுவலராக பணியாற்றி வரும் விஷ்ணுமூர்த்தி, பூட்டர் பவுண்டேசனில் பணியாற்றிய இவரது மனைவி வனிதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து பல்கலைக்கழக மேலாண்மைதுறை பேராசிரியர் சிவசுப்பிரமணியபாரதி, பொருளாதாரத்தலைவர் பேராசிரியர் ஜெயராமன், உளவியல் துறை பேராசிரியர் ஜெயக்குமார், விலங்கியல் துறை உதவி பேராசிரியர் நரேஷ்குமார், பெரியார் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையின் பொறுப்பாளர் நந்தீஸ்வரன் ஆகிய 5 பேரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அனைவரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் பிரிவு அலுவலர் விஷ்ணுமூர்த்தியின் மனைவி வனிதாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இவர் பூட்டர் பவுண்டேசனில் அலுவலக உதவியாளராக சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவரிடம் உதவி கமிஷனர் நிலவழகன் நேற்று பலமணி நேரம் விசாரணை நடத்தினார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘பூட்டர் பவுண்டேசன் தொடர்பாக பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது. இதை வைத்து மேலும் பலருக்கு சம்மன் அனுப்பி அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படும்,’’ என்றனர்.

The post தனியார் நிறுவனம் தொடங்கி முறைகேடு பெரியார் பல்கலை. அதிகாரி மனைவியிடம் விசாரணை: மேலும் பலருக்கு சம்மன் அனுப்ப முடிவு appeared first on Dinakaran.

Tags : Periyar University ,Salem ,booter ,Salem Periyar University ,Booter Foundation ,Dinakaran ,
× RELATED பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு ராமதாஸ் கண்டனம்..!!