×

மதத்தை வைத்து அரசியல் செய்வதா? அண்ணாமலையை விரட்டியடித்த இளைஞர்கள்: பிஜேபியே வெளியே போ என்று கோஷத்தால் பரபரப்பு

பாப்பிரெட்டிப்பட்டி: பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை தற்போது தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் செய்து வருகிறார். இந்த நடைபயணத்தில் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் சர்ச்சைகள் புயலாக கிளம்பி வருகிறது. அந்தவகையில் நேற்று மாலை சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து காரில் பொம்மிடி வழியாக தர்மபுரிக்கு சென்றார். வழியில் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள பி.பள்ளிப்பட்டியில் கட்சியினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் சாலையோரம் இருந்த பழமையான லூர்து அன்னை சர்ச்சுக்குள் பாஜவினர் அவரை அழைத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்த இளைஞர்களும், கிறிஸ்தவர்களும் அண்ணாமலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

* கூட்டத்தினர்: புனிதமான இடத்தில் நீங்கள் வந்து மாலை போடக்கூடாது.

* அண்ணாமலை: எல்லோரும் நல்லா இருக்கணும் என்று வேண்டுவதற்காக நான் இங்கு வந்தேன்.

* கூட்டத்தினர்: எல்லாரும் நல்லா இருக்கணும் என்று கூறும் நீங்கள் கிறிஸ்தவ மக்களை வதைப்பது ஏன்? பின்தங்கிய மக்களுக்கு ஒன்றிய அரசின் சலுகைளை வழங்க மறுப்பது ஏன்?

* அண்ணாமலை: நாங்கள் எல்லாவற்றையும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி செய்கிறோம். நீங்கள் மதத்தை வைத்து எதுவும் கேட்கக்கூடாது.

* கூட்டத்தினர்: மதத்தை வைத்து அரசியல் செய்வது யாரென்று மக்களுக்கு நல்லாத் தெரியும்.

* அண்ணாமலை: இலங்கையில் 2019ம் ஆண்டு 1 லட்சத்து 60 ஆயிரம் தமிழர்கள் இறந்தபோது நீங்கள் எங்கே போனீர்கள். கட்சிக்காரர்கள் சிலரின் தூண்டுதல் காரணமாக நீங்கள் இப்படி செய்கிறீர்கள்.

* கூட்டத்தினர்: இங்கு கட்சிக்காரர்கள் யாருமே இல்லை.

* அண்ணாமலை: இங்கே வரக்கூடாது என்று என்னை தடுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இந்த ஆலயம் உங்க பெயரிலயா இருக்கு? நான் தர்ணா செய்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?

* கூட்டத்தினர்: இங்கு வரக்கூடாது. இது எங்களுக்கான ஆலயம் என்று கூறினர். அப்போது அண்ணாமலையுடன் சரிக்கு சரியாக வாக்குவாதம் செய்த இளைஞர் ஒருவரை போலீசார் அழைத்துச்சென்றனர். பின்னர் கூட்டத்தினர் அனைவரும் வெளியே போ. வெளியோ போ. பிஜேபியே வெளியே போ என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு வந்த போலீசார் என்னசெய்வது என்று தெரியாமல் திகைத்தனர். தொடர்ந்து ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் திரண்டு கோஷமிட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து கூட்டத்தினரை சமாதானப்படுத்திய போலீசார் அண்ணாமலையை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

The post மதத்தை வைத்து அரசியல் செய்வதா? அண்ணாமலையை விரட்டியடித்த இளைஞர்கள்: பிஜேபியே வெளியே போ என்று கோஷத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,BJP ,Papriprettipatti ,Tamil Nadu ,Omalur ,Salem district ,Pommidi ,
× RELATED தமிழிசை பற்ற வைத்த நெருப்பு பற்றி...