×

முரசொலி அலுவலகம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு

சென்னை: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளித்த புகாரில் தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான “முரசொலி”-யின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட் 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என்று பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019ம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டிலின ஆணையம் விசாரிக்க முடியாது என்றும் கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது முரசொலி அறக்கட்டளை தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, பஞ்சமி நிலம் அல்ல என்று அரசு அறிக்கை அளித்ததால், புகாரை முடிக்க முடிவெடுத்துள்ளதாக ஆணையம் கூறியது. ஆனால் புகார் நிலுவையில் தான் உள்ளது. பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரங்களை புகார்தாரர் சமர்ப்பிக்கவில்லை. அரசியல் காரணத்திற்காக தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் இந்த புகாரை நிலுவையில் வைத்திருப்பது அதிகார துஷ்பிரயோகமாகும்.

ஆணையம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. பஞ்சமி நிலமா இல்லையா என வருவாய் துறை தான் விசாரிக்க முடியுமே தவிர தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரிக்க முடியாது. தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, பட்டா மற்றும் விற்பனை பத்திரம் ஆகியவை உரிமையாளரை முடிவுசெய்வதற்கான இறுதியான ஆதாரம் அல்ல.

ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க கூடாது என்று வாதிட்டார். புகார்தாரர் ஸ்ரீநிவாசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி ஆஜராகி, வழக்கு நிலுவையில் இருந்த போது பட்டா வழங்கப்பட்டது. அதனால் ஆணையம் விசாரணை செய்வது சரியானதுதான். திருவண்ணாமலை நிலம் தொடர்பாகத் தான் உள்ளது என்றார்.அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

The post முரசொலி அலுவலகம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Murasoli ,CHENNAI ,Madras High Court ,National Commission for Scheduled Castes ,Panchami ,DMK ,Kodambakkam, Chennai ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...