×

அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்குகளை விசாரிக்க கூடாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் கருப்பையா காந்தி என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,‘‘தமிழ்நாட்டில் முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்கள் பலர் மீது உள்ள ஊழல் உள்ளிட்ட முறைகேடு வழக்குகள் உள்ளது. குறிப்பாக அவரவர்கள் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் வழக்குகளை திரும்பப் பெறுவதோடு உரிய விசாரணையும் நடத்தபடாமல் உள்ளது. எனவே இதுபோன்ற அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐக்கு மாற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

முன்னதாக இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுகுறித்து பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன்,‘‘இதுபோன்ற பல வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறார்.

அப்படி இருக்கையில் இந்த மனு தேவையில்லாத ஒன்றாகும். மேலும் இதுபோன்று வழக்குகள் தொடர்வதும், அதில் உத்தரவுகளை பெறுவதும் என்பது தவறான முன் உதாரணமாக அமைந்து விடும். நீதிமன்றத்தின் மீதும், விசாரணை அமைப்புகள் மீதும் நம்பிக்கை இல்லாமல் இவ்வாறு தொடரப்படும் வழக்குகளை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் விசாரிக்க கூடாது. இதுபோன்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்க கூடாது என தெரிவித்தார். இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

* 10 % கூடுதல் இடஒதுக்கீடு வழக்கு தள்ளுபடி
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான கூடுதல் 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்தக்கோரிய வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.

The post அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்குகளை விசாரிக்க கூடாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Supreme Court ,New Delhi ,Karupiya Gandhi ,Tamil Nadu ,
× RELATED போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு...