×

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் பீகார் அணிக்கு எதிராக மும்பை இன்னிங்ஸ் வெற்றி

பாட்னா: பீகார் அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 51 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. மொயின் உல் ஹக் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற பீகார் அணி முதலில் பந்துவீசியது. மும்பை அணி முதல் இன்னிங்சில் 251 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. புபென் லால்வானி 65 ரன், சுவேத் பார்கர், தனுஷ்கோடியன் தலா 50 ரன், ஷிவம் துபே 41 ரன் விளாசினர். பீகார் பந்துவீச்சில் வீர் பிரதாப் சிங் 5 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய பீகார் அணி முதல் இன்னிங்சில் 100 ரன்னுக்கு சுருண்டது (44.5 ஓவர்).

இதையடுத்து, பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய அந்த அணி மீண்டும் 100 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (35.1). மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 51 ரன் வித்தியாசத்தில் வென்று 7 புள்ளிகளை தட்டிச் சென்றது. குஜராத் வெற்றி: தமிழ்நாடு அணியுடன் வல்சத், படேல் ஸ்டேடியத்தில் நடந்த சி பிரிவு லீக் ஆட்டத்தில், குஜராத் 111 ரன் வித்தியாசத்தில் வென்றது. முதல் இன்னிங்சில் குஜராத் 236, தமிழ்நாடு 250 ரன் எடுத்தன. 14 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய குஜராத் 312 ரன் குவித்து ஆல் அவுட்டானது.

இதையடுத்து, 299 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு 3ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 32 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த கடைசி நாள் ஆட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்த தமிழ்நாடு 187 ரன்னுக்கு சுருண்டு (81.2 ஓவர்) 111 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கேப்டன் சாய் கிஷோர் அதிகபட்சமாக 48 ரன், இந்திரஜித், பிரதோஷ் ரஞ்சன்* தலா 39 ரன், சுதர்சன் 18, விஜய் ஷங்கர் 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். குஜராத் பந்துவீச்சில் நக்வஸ்வாலா 4, சிந்தன் கஜா 3, பிரியஜித்சிங் 2, பிஷ்னோய் 1 விக்கெட் வீழ்த்தினர். குஜராத் 6 புள்ளிகள் பெற்றது.

* பெங்கால் – ஆந்திரா அணிகளிடையே விசாகப்பட்டணத்தில் நடந்த பி பிரிவு லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது (பெங்கால் 409 & 82/1; ஆந்திரா 445). பெங்கால் 1 புள்ளி, ஆந்திரா 3 புள்ளி பெற்றன.

* கோவா அணியுடன் அகர்தலாவில் நடந்த சி பிரிவு லீக் ஆட்டத்தில் திரிபுரா 237 ரன் வித்தியாசத்தில் வென்றது (திரிபுரா 484 & 151/5 டிக்ளேர்; கோவா 135 & 263).

* ஏ பிரிவு: சோலாபூரில் மணிப்பூருடன் மோதிய மகாராஷ்டிரா இன்னிங்ஸ், 69 ரன் வித்தியாசத்தில் வென்றது (மணிப்பூர் 137 & 114; மகாராஷ்டிரா 320).

* சர்வீசஸ் அணியுடன் நாக்பூரில் நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் விதர்பா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது (சர்வீசஸ் 241 & 155; விதர்பா 219 & 178/3).

* பி பிரிவு: அசாம் அணியுடன் ராய்பூரில் நடந்த போட்டியில் சத்தீஸ்கர் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி (சத்தீஸ்கர் 327 & 87/0; அசாம் 159 & 254).

* ஜம்மு – இமாச்சல், ம.பி. – உத்தரகாண்ட், சண்டிகர் – ரயில்வேஸ், உ.பி. – கேரளா, அரியானா – ராஜஸ்தான், ஜார்க்கண்ட் – சவுராஷ்டிரா மோதிய லீக் ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

The post ரஞ்சி கோப்பை கிரிக்கெட் பீகார் அணிக்கு எதிராக மும்பை இன்னிங்ஸ் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Ranji Cup ,Bihar ,Patna ,Ranji Trophy Elite B division league ,Moin-ul-Haq Stadium ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!