×

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் விவகாரம் தேர்தல் ஆணையம் மீண்டும் பதில் அளிக்க தவறிவிட்டது: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் நிலை குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம்ரமேஷ் பல்வேறு கேள்விகளை எழுப்பி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் காங்கிரஸ் குழுவை சந்திக்க அனுமதி கேட்டு இருந்தார். இந்த கடிதம் குறித்தும், விவிபேட் குறித்தும் எழுந்த புகார்களை நிராகரித்து தேர்தல் ஆணையம்பதில் கடிதம் எழுதியது. இதுதொடர்பாக மீண்டும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு, ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது;

தேர்தல் ஆணையத்திடம் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கான சந்திப்புக்காக நான் ஒரு வெளிப்படையான கோரிக்கையை முன்வைத்தேன். வரவிருக்கும் தேர்தல்களுக்கு விவிபேட்களைப் பயன்படுத்துவது குறித்து நேரடி ஆய்வுக்கு நேரம் ஒதுக்க கேட்டு இருந்தேன். ஆனால் தேர்தல் ஆணையம் எங்கள் கோரிக்கையை முற்றிலுமாக ஒதுக்கித் தள்ளி விட்டது. மேலும் எங்களின் கேள்விகளுக்கும் இவிஎம்கள் பற்றிய உண்மையான கவலைகளுக்கும் உரிய பதிலை வழங்குவதில் மீண்டும் தோல்வியடைந்துள்ளது.

இவிஎம் மற்றும் விவிபேட் பற்றி விளக்க பல பிரதமர்கள், பல மாநில முதல்வர்களை உருவாக்கிய நாட்டின் மிகப்பெரிய கட்சிக்கு நேரம் ஒதுக்காததும், எங்கள் கட்சி பிரதிநிதிகளை சந்திக்க மறுப்பதும் துரதிருஷ்டவசமானது. எனவே மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதால், இந்தியா கூட்டணி கட்சிகளின் ஒரு சிறிய குழுவைச் சந்தித்து, விவிபேட் பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் நேரடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று நான் மீண்டும் ஒரு முறை மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

The post மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் விவகாரம் தேர்தல் ஆணையம் மீண்டும் பதில் அளிக்க தவறிவிட்டது: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,EVM ,Jairam Ramesh ,New Delhi ,Congress ,General Secretary ,VVPAT ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...