×

ராமர் கோயில் குடமுழுக்கு விழா; 2,200 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு: சோனியா, ரஜினி உள்ளிட்டோர் பெயரும் உள்ளது

அயோத்தி: ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்காக சோனியா, ரஜினி உட்பட 2,200 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி நடைபெறவுள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது. அயோத்தி நகரின் முக்கிய சாலைகள் அழகிய தூண்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வௌியிட்ட அறிக்கையின்படி, குடமுழுக்கு விழாவிற்கு 4,000 சாதுக்கள், 2,200 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். காசி விஸ்வநாதர் கோவில், மாதா வைஷ்ணோ தேவி கோயில் பிரதிநிதிகள், இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் அழைப்பிதழ் பட்டியலில் உள்ளன.

அந்த பட்டியலில் திரைத்துறையை சேர்ந்த அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், அனுபம் கெர், அக்ஷய் குமார், ரஜினிகாந்த், தனுஷ், மோகன் லால், பிரபாஸ், சிரஞ்சீவி சன்னி தியோல் உள்ளிட்ட 19 பேரின் பெயர்களும், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, கவுதம் அதானி, ரத்தன் டாடா உள்ளிட்டோர் பெயரும், விளையாட்டு வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்டோர் பெயரும் உள்ளன. அரசியல் தலைவர்களை பொறுத்தமட்டில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மன்மோகன் சிங், எச்.டி.தேவகவுடா, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற தலைவர்களின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

கர்ப்பிணிகளின் விநோத கோரிக்கை
ராமர் கோயில் குடமுழுக்கு தினத்துன்று குழந்தையை பெற்று கொள்ள விரும்புவதாக கூறி, வரும் 22ம் தேதி தங்களுக்கு ‘சிசேரியன்’ அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கர்ப்பிணி பெண்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கணேஷ் சங்கர் வித்யார்த்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் துறை பொறுப்பாளர் சீமா திவேதி கூறுகையில்:
‘ஒரே பிரசவ அறையில் 12 முதல் 14 பேர், சிசேரியன் பிரசவம் செய்யக் கோரி எழுத்துப்பூர்வ கோரிக்கைகள் அளித்துள்ளனர். ஜனவரி 22ம் தேதி, 35 சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன’ என்றார். ராமர் கோயில் குடமுழுக்கு தினத்தன்று பிரசவம் செய்து கொள்ள விரும்பும் மால்தி தேவி என்ற கர்ப்பிணி பெண் கூறுகையில், ‘வரும் 17ம் தேதி, எனக்கு குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தேதி கொடுத்துள்ளனர்.

ஆனால், ராமர் கோயிலில் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை நடைபெறும் நாளில் என் குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதனால், எனது குழந்தை வளர்ந்து வெற்றியும் பெருமையும் பெறும் என்று நம்புகிறேன்’ என்றார்.

எந்தவொரு நபருக்கும் பெருமை கிடையாது
பாஜக மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான உமா பாரதி அளித்த பேட்டியில், ‘ராமஜென்மபூமி மீட்பு என்பது 500 ஆண்டுகால போராட்டமாகும். அதன் வெற்றிக்கு தனிப்பட்ட யாருக்கும் முழு பெருமையும் கிடைக்காது. நாட்டிலேயே 500 ஆண்டுகள் நீடித்து வெற்றி பெற்ற ஒரே இயக்கம் ராமஜென்மபூமி இயக்கம்தான்.

இதற்கான பெருமை எந்த ஒரு நபருக்கும் போய் சேராது. எனவே, அதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தவர்களுக்கும், சர்ச்சைக்குரிய கட்டிடத்தை இடித்தவர்களுக்கும் பெருமை சேர வேண்டும் என்று நினைக்கிறேன். கோயில் கட்டுமானத்திற்கான பெருமை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரையே சாரும். இருப்பினும், ராமர் கோயிலுக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தவர்களை பாராட்ட வேண்டும்’ என்றார்.

The post ராமர் கோயில் குடமுழுக்கு விழா; 2,200 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு: சோனியா, ரஜினி உள்ளிட்டோர் பெயரும் உள்ளது appeared first on Dinakaran.

Tags : RAMAR TEMPLE ,CEREMONY ,SONIA, ,RAJINI ,Ayodhya ,Sonia ,Ramar Temple Umbrella Ceremony ,Uttar Pradesh, Ayodhya Pradesh ,
× RELATED பெரும் தொழிலதிபர்களுக்கு கடன்...