×

பந்தலூர் அருகே பிடிக்கப்பட்ட சிறுத்தை வண்டலூர் கொண்டு செல்லப்பட்டது

பந்தலூர்: மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சிறுத்தைக்கு முதுமலை காப்பகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு இன்று காலை சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மேங்கொரேஞ் தனியார் தேயிலைத்தோட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்த சிவசங்கர கருவாள் தம்பதியின் மகள் நான்சியை (3) நேற்று முன்தினம் சிறுத்தை தாக்கி கொன்றது.இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள், ஆட்கொல்லி சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பந்தலூர், கூடலூரில் கடைகள் அடைக்கப்பட்டது. அரசு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை.

இந்த நிலையில் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு முகாமில் இருந்து வரவழைக்கப்பட்ட கும்கி யானை பொம்மன் உதவியுடன் வனப்பணியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மதியம் 2 மணி அளவில் ஏலமன்னா பகுதியில் சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையை கூண்டில் ஏற்றி வாகனத்தில் முதுமலை கொண்டு சென்றனர். மயக்க ஊசி செலுத்தி பிடித்ததால் அங்கு சிறுத்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வாகனத்தில் சிறுத்தை கொண்டு செல்லப்பட்டது.

இதற்கிடையே சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுமி நான்சி குடும்பத்துக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.10 லட்சத்துக்கான நிவாரண தொகையை கூடலூர் கோட்டாட்சியர் முகமது குதரதுல்லா வழங்கினார். இதுதவிர வனத்துறை சார்பில் உயிரிழந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த சிறுமி நான்சி உடல் பந்தலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து கோவை கொண்டு வரப்பட்டு நீலகிரி எம்பி ஆ.ராசா செலவில் சிறுமி உடல் விமானத்தில் அவரது சொந்த மாநிலமான ஜார்கண்ட் மாநிலத்துக்கு இன்று கொண்டு செல்லப்பட உள்ளது.

The post பந்தலூர் அருகே பிடிக்கப்பட்ட சிறுத்தை வண்டலூர் கொண்டு செல்லப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Bhandalur ,Vandalur ,Mudumalai Archipelago ,Chennai Vandalur Zoo ,Sivasankara Karawala ,Jharkhand State ,Mangoreng Private Tea Garden ,Bhandalur, Nilgiri District ,Dinakaran ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம்,...