×

பத்திரப்பதிவுத்துறையில் அமைச்சரின் பெயரில் ஒவ்வொரு ஆவணத்திற்கும் பணம் பெறுவதாக கூறுவது பொய்யான குற்றச்சாட்டு: அமைச்சர் பி.மூர்த்தி மறுப்பு

சென்னை: பத்திரப்பதிவுத்துறையில் அமைச்சரின் பெயரில் ஒவ்வொரு ஆவணத்திற்கும் பணம் பெறுவதாக பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மறுப்பு தெரிவித்துள்ளார். பதிவுத்துறையில் நாள்தோறும் நடைபெறும் பதிவுகளில் ஒவ்வொரு ஆவணத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தொகை தனியே கையூட்டாகப் பெறப்படுகிறது என்றும் அது துறையின் அமைச்சரின் பெயரில் வசூலிக்கப்படுகிறது என்றும் வேண்டுமென்றே உள்நோக்கம் கொண்டு திரிக்கப்பட்ட ஒரு செய்தி பரப்பப்பட்டு வருகிறது. பதிவுத்துறையைப் பொருத்தமட்டில் ஒரு நாளைக்கு ஏறக்குறைய பத்தாயிரம் ஆவணங்கள் பதியப்படுகின்றன. ஆவணங்களைப் பதிவுக்கு கொண்டு வரும் பொதுமக்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களையும் ஆன்லைன் வழியாகவே செலுத்த வேண்டும். அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்தப்பட முடியும் என்ற வகையில் பதிவுத்துறையானது முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு இதற்கென விரிவான மற்றும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரசுக்கு குறைந்த தொகைகள் செலுத்தப்பட வேண்டியிருந்தால் ஏடிஎம் கார்டு ஸ்வைப் பண்ணும் வகையில் அவற்றிற்கென PoS மெஷின்கள் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன. எனவே பதிவுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் கைகளில் பணத்தைக் கொண்டு வர தேவையில்லை. மேலும் ஆவணங்கள் பதிவு செய்கையில் இடைத்தரகர்களின் தலையீடு இருக்கக்கூடாது என்பதும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இடைத்தரகர்களால் பதிவு பொதுமக்கள் ஏமாற்றப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அலுவலகங்களுக்குள் இடைத்தரகர்களோ ஆவண சார்பதிவாளர் எழுத்தர்களோ அனுமதிக்கப்படக்கூடாது என்று கண்டிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆவண எழுத்தர்கள் வசூலிக்கும் கட்டணங்களுக்காக தனியே பில் வழங்க வேண்டும் எனவும் அந்த பில்லையும் ஓர் ஆவணமாக இணைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனை சரியாக பின்பற்றாத மற்றும் பொதுமக்களிடம் அதிக பணம் பெறுவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் ஆவண எழுத்தர்களின் உரிமங்கள் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு ரத்து செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் இருக்கும் 581 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு மண்டல துணை பதிவுத்துறை தலைவர் அலுவலகங்களிலிருந்தும் சென்னையில் இருக்கும் பதிவு துறை தலைவர் அலுவலகத்திலிருந்தும் நேரடியாகக் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதிவுக்கு வரும் ஆவணங்களைப் பதிவு செய்வதற்காக கையூட்டு கொடுக்கப்பட கூடாது என்பது பொதுமக்களுக்கு அவ்வப்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது. பதிவுக்காக சார் பதிவாளர்கள் கையூட்டு பெறும் நிகழ்வுகள் கவனத்திற்கு வருகையில் அதன் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் ஊழல் தடுப்புதுறையினரின் தொடர் கண்காணிப்பின் கீழ் இருந்து வருகின்றன.

அத்துறையினரால் அவ்வப்போது சஸ்பெக்டட் ஆஃபீஸர்ஸ் என்று அறிக்கை செய்யப்படும் சார்பதிவாளர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் அல்லது உரிய ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். பதிவுத்துறை அமைச்சரால் நடத்தப்படும் பதிவுத்துறை பணி குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களில் பொதுமக்களின் நலனுக்கு எதிராக சார்பதிவாளர்கள் செயல்படக்கூடாது என்றும் தேவையில்லாமல் பதிவு பொதுமக்கள் காக்க வைக்கப்படக்கூடாது என்றும் பதியப்பட்ட ஆவணங்கள் அன்றன்றே திருப்பித் தரப்பட வேண்டும் என்றும் கையூட்டு பெறுவது போன்ற அழுத்தங்கள் பதிவு பொதுமக்களுக்கு தரப்படக் கூடாது என்றும் கண்டிப்பான அறிவுரைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. பதிவுத்துறை சார்ந்த சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தின்போது பொதுமக்களிடமிருந்து கையூட்டு பெற மாட்டோம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு அமைச்சரால் கோரிக்கை வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்சம் கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் லஞ்ச புகார் குறித்த விவரங்கள் பதிவுத்துறை தலைவருக்கோ அல்லது மண்டல துணை பதிவுத்துறை தலைவர்களுக்கோ அனுப்பப்பட வேண்டும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ஆவணங்களின் பதிவுக்காக பொதுமக்களிடமிருந்து கையூட்டு பெறப்படுவதைத் தவிர்ப்பதற்காக இத்தகைய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு ஆவணத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தொகை தினமும் பதிவு பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது என்று கற்பனையான மற்றும் பொய்களால் புனையப்பட்ட செய்தி பரப்பப்படுவது விபரீதமான உள்நோக்கம் கொண்டதாகும். ஆவணங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கும் ஆவணதாரர்களிடமே நேரடியாகக் கேட்டு இது குறித்த உண்மைத் தன்மையைத் தெரிந்து கொள்ளலாம். சமீப காலங்களில் பதிவுத்துறையில் பல சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இந்தியாவின் பிற மாநிலங்கள் தமிழக பதிவுத்துறையை முன்னோடி துறையாக பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பதிவுத்துறையின் அனைத்து நடவடிக்கைகளும் கணினிமயமாக்குதல், 1865 ஆம் ஆண்டு முதலே பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் கணினிப்படுத்துதல் ஆன்லைன் மூலமாகவே கட்டணம் இன்றி வில்லங்க சான்று பார்த்தல், கட்டணம் இன்றி பதிவிறக்கம் செய்தல், அனைத்து கட்டணங்களையும் ஆன்லைன் வழியாகவே செலுத்துதல், ஒரு சில ஆவணங்களை சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரடியாக வராமல் ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்தல், எல்லாவற்றிற்கும் மேலாக மோசடியாக ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் அந்த ஆவணங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவுத்துறைக்கு வழங்கும் வகையிலான சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தது மற்றும் மோசடியாக ஆவணங்களைப் பதிவு செய்யும் சார்பதிவாளர்கள் மீதும் அந்த ஆவணங்களை எழுதுவோர் மீதும் குற்றவியல் நடவடிக்கை தொடர்வது போன்ற பல முன்னோடியான சீர்திருத்தங்கள் பதிவுத்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்காளம், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் இருந்து அதிகாரிகள் நேரடியாக வந்து தமிழக பதிவுத்துறையின் சீர்திருத்தங்களைப் பார்வையிட்டு தங்கள் மாநிலங்களில் அவற்றை செயல்படுத்த முனையும் வண்ணம் தமிழக அரசின் பதிவுத்துறை மிகப்பெரிய சீர்திருத்தங்களுடனான வளர்ச்சியை அடைந்துள்ளது. மேலும் 3 ஆண்டுகளுக்கு முன்பாக வருடத்திற்கு ரூபாய்.10,000 கோடி வருவாய் மட்டுமே எட்டி வந்த பதிவுத்துறையில் சமீப காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட பல அடிப்படை மாற்றங்களின் காரணமாகவும் பதிவு பொதுமக்களுக்கு பதிவுத்துறையின் மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கையின் காரணமாகவும் கடந்த ஆண்டில் ரூபாய் 17 ஆயிரத்து 297 கோடி வருவாயை பதிவுத்துறை அடையும் வகையில் பதிவுத்துறை பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இவ்வாறு பதிவு நடைமுறைகளில் பெரும் சீர்திருத்தங்களோடு பதிவு பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல முன்னோடியான திட்டங்களை பதிவுத்துறை செயல்படுத்தி வரும் நிலையில் பதிவுத்துறையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் தினமும் பதியப்படும் ஒவ்வொரு ஆவணத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தொகை கையூட்டாகப் பெறப்படுகிறது என உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பப்படுவது முற்றிலும் ஆதாரமற்ற உள்நோக்கம் கொண்ட செயலாகும். ஆவணங்களின் பதிவிற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை தவிர கூடுதலாக பணம் எதுவும் கொடுக்கத் தேவையில்லை என்று ஏற்கனவே தொடர்ந்து வலியுறுத்தி சொல்லப்பட்டு வருவது போலவே தற்போது மீண்டும் அதே கருத்து வலியுறுத்தப்படுகிறது. பதிவுக்கு வரும் ஆவணங்களுக்காக அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை பதிவுப் பொதுமக்கள் ஆன்லைன் வழியாகவே செலுத்த வேண்டும் என்பதைத் தவிர கூடுதலான எந்த ஒரு தொகையையும் யாருக்கும் கொடுக்க தேவையில்லை.

இதையும் மீறி இடைத்தரகர்களோ ஆவண எழுத்தர்களோ அல்லது சார்பதிவாளர்களோ ஆவணப் பதிவிற்காக கையூட்டு கோரினால் இது குறித்து கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு புகாரைத்
தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. கையூட்டு தொடர்பான விரிவான புகார்களை நேரடியாகவே பதிவுத்துறை தலைவருக்கோ அல்லது மண்டல துணை பதிவுத்துறை தலைவர்களுக்கோ அல்லது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறைக்கோ அனுப்பலாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இடைத்தரகர்களோ ஆவண எழுத்தர்களோ அல்லது சார்பதிவாளர்களோ அல்லது அதற்கு மேல்நிலை அலுவலர்களோ பொதுமக்களிடம் ஆவணப் பதிவுக்காக கையூட்டு கேட்டால் இது குறித்த புகார்களை கீழ்கண்ட எண்களில் உடனடியாக தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள்: 9498452110, 9498452120, 9498452130. மேலும், அமைச்சரின் பெயரிலோ அல்லது அதிகாரிகளின் பெயரிலோ ஆவணப்பதிவிற்கு என்று கையூட்டு கேட்டால், இது தொடர்பான புகார்களை ctsec@tn.gov.in என்ற e-Mail முகவரியில் தகுந்த மேல் நடவடிக்கைக்காக வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் அரசு செயலாளருக்கு நேரடியாக அனுப்பிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

The post பத்திரப்பதிவுத்துறையில் அமைச்சரின் பெயரில் ஒவ்வொரு ஆவணத்திற்கும் பணம் பெறுவதாக கூறுவது பொய்யான குற்றச்சாட்டு: அமைச்சர் பி.மூர்த்தி மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,P. Mourti ,Chennai ,Minister of ,Business Taxes and Registries, B.P. ,Minister of Press Registry ,Murthy ,P. Murthi Refusal ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...