மதுரை : பொங்கல் பரிசுத் தொகையை வங்கி கணக்கில் வரவு வைப்பது குறித்து பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சுவாமிமலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை மற்றும் ரூ.1000 ரொக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெல்லத்திற்கு பதில் சர்க்கரை வழங்கப்படும் என்ற அறிவிப்பால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பால் வெல்ல தயாரிப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெல்லம் சேர்க்க வேண்டும். அதே போல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.1000 தொகையை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். மேலும் கரும்பு கொள்முதலுக்கான தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும், “என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.1000 வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டது.பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கும் பணியும் நேற்றே தொடங்கிவிட்டன. வெள்ளை சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டுகளில் முன்கூட்டியே கொள்முதல் செய்து கொடுத்தபோது வெல்லம் உருகிவிட்டதாக புகார்கள் எழுந்தன.எனவே இந்த வருடம் எந்த மாற்றம் செய்தாலும் அது அரசுக்கு கூடுதல் சுமை ஆகிவிடும்,” இவ்வாறு தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “கலைஞர் மகளிர் உரிமை தொகை அரசால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு பயனாளர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. அதே போல் குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைப்பதில் அரசுக்கு என்ன சிக்கல் வர போகிறது?. அடுத்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு கொள்முதலுக்கும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாமே. பொங்கல் பரிசுத்தொகையை வங்கி கணக்கில் வரவு வைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்,” இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
The post அடுத்தாண்டு சர்க்கரைக்கு பதில் வெல்லம்.. பொங்கல் பரிசுத் தொகையை வங்கி கணக்கில் வரவு வைப்பது : குறித்து பரிசீலனை செய்க : அரசுக்கு உத்தரவு!! appeared first on Dinakaran.