×

அயனாவரம் பஸ் நிலையத்தில் தவித்த 6 வயது சிறுமி மீட்பு: பெற்றோரிடம் ஒப்படைப்பு

பெரம்பூர்: அயனாவரம் பஸ் நிலையம் அருகே தவித்த 6 வயது பெண் குழந்தையை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சென்னை அயனாவரம் பேருந்துநிலையம் அருகே 6 வயது குழந்தை ஒன்று கிடப்பதாக கிடைத்த தகவல்படி, அயனாவரம் இன்ஸ்பெக்டர் பரணிநாதன் தலைமையில் போலீசார் விரைந்தனர். பின்னர் அங்கு கிடந்த குழந்தை யார் என்பது குறித்து விசாரணை நடத்தியபோது குழந்தைக்கு சரியாக பேச வரவில்லை என்பது தெரிந்தது.

வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் குழந்தையாக இருக்குமோ என்று நினைத்து இந்தி பேசும் நபர்களை வரவழைத்து இந்தியில் பேசியபோதும் குழந்தை பதில் ஏதும் கூறவில்லை. இதனால் அந்த குழந்தையை செல்போனில் புகைப்படம் எடுத்து போலீஸ் வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிட்டனர். இதன்பிறகு குழந்தையை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று பால் மற்றும் பிஸ்கட் வாங்கி கொடுத்தனர். இந்த நிலையில், வாட்ஸ் அப்பில் பதியப்பட்ட தகவல் வைரலாகி அயனாவரம் பகுதியை சேர்ந்த ஒருவர் போலீசாரை தொடர்புகொண்டு குழந்தை பற்றிய தகவல்களை கேட்டறிந்தார்.

இதன்பிறகு அயனாவரம் பொன்வேல்புரம் பகுதியை சேர்ந்த ரஹ்மத்துல்லா (27), அவரது மனைவி அசியானா ஆகியோர் வந்து குழந்தை எங்களுடையது என்று தெரிவித்ததுடன் குழந்தையின் பெயர் அப்சா (6) என்று தெரிவித்தனர். இதையடுத்து விசாரணைக்கு பிறகு குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தனர். இதன்பிறகு பெற்றோர், அயனாவரம் உதவி கமிஷனர் முத்துக்குமாரை சந்தித்து, ‘‘குழந்தை விளையாடும்போது வழி தவறிவந்துவிட்டது. குழந்தைக்கு சரியாக பேச்சு வராது. அதற்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறோம்’ என்று தெரிவித்தனர். குழந்தையை உடனடியாக மீட்டு தந்த போலீசாருக்கு குழந்தையின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

The post அயனாவரம் பஸ் நிலையத்தில் தவித்த 6 வயது சிறுமி மீட்பு: பெற்றோரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Ayanavaram bus ,Perambur ,Ayanavaram ,Chennai Ayanavaram bus station ,Inspector ,Paraninathan ,
× RELATED ஆந்திராவில் இருந்து சென்னைக்கு...