×

உச்சநீதிமன்றம் அதிரடி.. உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு அமல்படுத்த மாநில அரசுக்கே அதிகாரம்..!!

டெல்லி: உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்து கடந்த 2019ம் ஆண்டு ஒன்றிய அரசு சட்டம் நிறைவேற்றியது. ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வந்த இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு இருப்பதாக கூறி மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற் தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அதில் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று 3 நீதிபதிகளும், செல்லாது என்று 2 நீதிபதிகளும் தீர்ப்பளித்தனர். எனவே அரசு கொண்டு வந்த 10 சதவீத இடஒதுக்கீட்டு முறை செல்லும் என்று உறுதியானது.

இந்நிலையில், 10% இடஒத்துக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்தக்கோரி பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தமிழ்நாடு, கர்நாடகாவில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். மேலும், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டியும், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்; 10 சதவீத இடஒத்துக்கீட்டை அமல்படுத்த வேண்டுமா என்பதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். இடஒத்துக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடுவதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post உச்சநீதிமன்றம் அதிரடி.. உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு அமல்படுத்த மாநில அரசுக்கே அதிகாரம்..!! appeared first on Dinakaran.

Tags : Supreme ,State Government ,Delhi ,Supreme Court ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...